நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் "வடக்குப்பட்டி ராமசாமி" திரைப்படத்தின் முழு விமர்சனம்
கதைக்களம் :
சிறு வயதில் பானை விற்பனை செய்யும் சிறுவனாக வடக்குப்பட்டி ராமசாமியாக நாயகன் சந்தானத்தின் அறிமுக கட்சி அமைகிறது. அவர் செய்யும் பானையை யாருமே வாங்கவில்லை என்பதால் பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் ராமசாமி, அதிலிருந்து மீள்வதற்காக என்ன செய்யலாம் என யோசிக்கிறார். அப்போதுதான் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் கடவுள் பக்தியால் அதீத மூடநம்பிக்கை உடையவர்களாக இருப்பதை அறிந்துகொள்கிறார்.
கடவுளின் பெயரால் எப்படி மக்களை ஏமாற்றி சம்பாதிக்கலாம் என பல வேலைகளை செய்து ஒரு கட்டத்தில் கோயில் கட்டி சம்பாதிக்கிறார். அதன் பிறகு அந்த கிராமத்துக்கு வரும் ஒரு பேராசை பிடித்த தாசில்தார் இதை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்க அவருக்கும் வடக்குப்பட்டி ராமசாமிக்கும் இடையே நடப்பதை நகைச்சுவையாக சொல்வதே படத்தின் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு
தனது மிகப்பெரிய பலமான காமெடி கதையையே மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார் சந்தானம். கோல்மால், பித்தலாட்டம், மக்களை ஏமாற்றுவது என தன்னுடைய கதாபாத்திரத்துக்கு காமெடிகள் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.அங்கங்கே தனது ட்ரேடு மார்க் (Trademark) ஒன் லைனர்கள் மூலம் ரசிகர்களை குதூகலப்படுத்துகிறார்.முதல் பாதியில் சேஷு மற்றும் மாறனின் காமெடி காட்சிகள் படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறது. இரண்டாம் பாதியில் எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, ஜான் விஜய், பிரசாந்த் என ஏகப்பட்ட காமெடியன்கள் சிரிப்பு விருந்தை வழங்கி இருக்கிறார்கள்
இயக்கம் மற்றும் இசை
"டிக்கிலோனா" படத்தில் டைம் டிராவல் கான்செப்டில் நகைச்சுவை விருந்து வைத்த இயக்குனர் கார்த்திக் யோகி, இப்படத்தில் மக்களின் மூடநம்பிக்கையால் நாயகன் அவர்களை ஏமாற்றும் விதத்தை சிரிப்பு சரவெடியாய் சொல்லியிருக்கிறார்.ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்திற்கு பாதகம் விளைவிக்காமல் செல்கிறது, பாடல்கள் சுமார் ரகம்
படம் எப்படி?
படத்தின் முதல் பாதி முழுவதுமே வெடிச்சிரிப்புகள். குறிப்பாக ‘மெட்ராஸ் ஐ’ நோயை பரப்புவதற்காக ராணுவ மேஜரான நிழல்கள் ரவியின் வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் எல்லாம் காமெடி அதகளத்தின் உச்சம். இடைவேளை வரை நேரம் போவதே தெரியாத அளவிற்கு காமெடிகளை திகட்ட திகட்ட ஊட்டிருக்கிறார்கள்.இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்களில் கூட்டணியில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் திரைக்கதை நகர்கிறது.
காமெடி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதற்கேற்ப பல இடங்களில் திரைக்கதையில் லாஜிக் ஓட்டைகள் தென்படுகின்றன. மூடநம்பிக்கையில் மக்கள் எப்படி சிக்கித் தவிக்கின்றனர் என்கிற பகுத்தறிவை போகிற போக்கில் சொல்லி பாராட்டுகளை பெறுகிறார்கள் மொத்தத்தில் கவலையை மறந்து கொஞ்ச நேரம் சந்தோஷமாக சிரிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு இப்படம் சிறந்த ட்ரீட்டாக அமையும்
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“