சிலை கடத்தலை பின்னணியாக கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களலே வந்திருக்கும் நிலையில் "பரம்பொருள்" படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.
கதைக்களம் :
நிறைய பணம் சம்பாதித்து ஒரு பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் காவல்துறை அதிகாரி மைத்ரேயனும் (சரத்குமார்), தன் தங்கையின் மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலையில் அதற்காக சிலை கடத்தல் தொழிலை செய்து வரும் ஆதியும் (அமிதாஷ் பிரதான்) இணைந்து ஒரு பழமையான புத்தர் சிலையை கடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை போகப் போக புரிந்து கொள்ளும் அவர்கள், அந்த சிலையை வெற்றிகரமாக கடத்தினார்களா ? என்பதே மீதி கதை
நடிகர்களின் நடிப்பு :
நேர்மையாக போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்த "போர் தொழில்" படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து அதற்கு எதிர்மறையான ஒரு போலீஸ் கதாபாத்திரம் தான் இந்த மைத்ரேயன். பணம்தான் முக்கியம், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் அந்த கதாபாத்திரத்தை, தன் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு சிறப்பாக உணர்த்தியிருக்கிறார். குறிப்பாக சட்டம் பேசும் இளைஞர்களை கஞ்சா கேஸில் சிக்க வைக்கும் விதம் மிரட்டல்.
நாயகன் அமிதாஷ் அப்பாவியாக இருந்தாலும் தங்கைக்காக சிலை கடத்தல் தொழில் செய்து அதில் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது என ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.வில்லனாக வரும் வின்செண்ட் அசோகன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரின் வில்லத்தனமும் மிரட்டல். சிலை வடிக்கும் கலைஞராக வரும் நாயகி காஷ்மீரா பர்தேசி தனக்கான பங்களிப்பை கொடுத்துள்ளார்.
இயக்கம் மற்றும் இசை :
அரவிந்த் ராஜின் இயக்கம், சிலை கடத்தல் உலகிற்கே ரசிகர்களை கொண்டு செல்கிறது. சிலை கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது,அதன் பின்னணியில் நடக்கும் விஷயங்களை நுட்பமாக திரைக்கதையில் வெளிப்படுத்தியிருக்கும் விதத்திற்கு பாராட்டுகள்.யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை மற்றொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.பாடல்கள் சுமார் ரகம்.
படம் எப்படி?
சமீபத்தில் திரைக்கு வந்த ஜெயிலர் படமும் சிலை கடத்தலை பின்னணியாக வைத்து தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் சொல்லாத பல உண்மைகளை சிலை கடத்தல் பற்றி இப்படம் அழகாக விவரிக்கிறது. அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட் (Twists) படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் மெதுவாக செல்வதாக தோன்றுவது மட்டுமே ஒரு சிறிய பின்னடைவாக இருக்கிறது. மற்றபடி, ஒரு நல்ல திரில்லர் கதையை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த "பரம்பொருள்"
மொத்தத்தில் படத்தில் ஒரு சில தேவையற்ற காட்சிகளையும், பாடல்களையும் குறைத்திருந்தால் சீட் எட்ஜ் திரில்லராக இன்னும் வீரியத்துடன் இப்படம் மக்களை சென்றடைந்திருக்கும்.
- நவீன் சரவணன்