கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் சர்தார் 2 படத்தின் படப்படிப்பிடிப்பின்போது, சண்டை கலைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில், சண்டைக்காட்சிக்காக ஆபத்தான சில ஸ்டண்ட்களை ஹீரோக்கள் மட்டுமல்லாமல், சண்டை கலைஞர்களும் மேற்கொள்வது வழக்கம். அதேபோல் சில சமயங்களில், ஹீரோக்கள் சில ரிஸ்கான காட்சிகளில் தங்களுக்கு பதிலாக ஒரு சண்டை கலைஞரை டூப்பாக நடிக்க வைத்து காட்சிகளை படமாக்குவார்கள். எப்படி இருந்தாலும் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கும்போது மிகுந்த கவனம் அவசியம் என்பதை ஏற்கனவே நடிகர் என் உயிர் தோழன் பாபு உணர்த்தியிருக்கிறார்.
அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது கிரேன் விழுந்து 3 சண்டை கலைஞர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது சர்தார் படமும் இணைந்துள்ளது. கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் சர்தார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. இதனிடையே சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பில், சண்டைக்காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்போது 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த சண்டை கலைஞர் ஏழுமலை என்பவர் உயிரிழந்தார். மார்பு பகுதியில் அடிப்பட்டதால், நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் மரணமடைந்தததாக கூறப்படுகிறது.
தற்போது அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த விபத்து, சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“