ஷங்கர் இயக்கத்தில் ராம்சரன் – எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரேடுத்துள்ள இயக்குனர் ஷங்கர் முதல்முறையாக தெலுங்கில் இயக்கியுள்ள படம் கேம் சேஞ்சர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இந்த படத்தில், ராம்சரன், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கியாரே அத்வானி, சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை தில்ராஜூ தயாரித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வருகிறது. இடையில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனால் கேம் சேஞ்சர் படத்தின் வெளியீடு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி கேம். சேஞ்சர் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தியன் 2 கொடுத்த முடிவை கேம் சேஞ்சர் கொடுக்க கூடாது என்றும் ராம்சரன் ரசிகர்கள் பலரும் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“