''மயில்போல பொண்ணு ஒன்னு''... மனதை மயக்கும் குரல் : இசையிலும் அசத்திய பவதாரணி திரைப்பயணம்
1976-ம் ஆண்டு பிறந்த பவதாரணி, 1995-ம் ஆண்டு பிரபுதேவா, ரோஜா நடிப்பில் வெளியான ராசையா படத்தில் இடம் பெற்ற மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தந்தையை போலவே இசையமைப்பிலும் அசத்தியுள்ள பவதாரணி 47 வயதில் மரணமடைந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறது.
Advertisment
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவருக்கு கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என 3 பிள்ளைகள் இருந்தனர். இவர்கள் மூவருமே இசையுலகில் சிறந்து விளங்கிய நிலையில், பவதாரணி பாடல் பாடி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். மேலும் இவரது குரலுக்கென்று தனித்துவம் இருந்தது.
1976-ம் ஆண்டு பிறந்த பவதாரணி, 1995-ம் ஆண்டு பிரபுதேவா, ரோஜா நடிப்பில் வெளியான ராசையா படத்தில் இடம் பெற்ற மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழில் சில பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல் மனதை மயக்கும் வகையில் அமைந்திருக்கும். அதேபோல் இவரது பாடல்களை கேட்கும்போது இதை பவதாரணி தான் பாடினார் என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் அவரது குரல் தனித்துவம் மிக்கதாக இருந்தது.
விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர், ராஜ்கிரன் நடித்த மாணிக்கம், அஜித்தின் உல்லாசம், விஜய் சூர்யா நடித்த நேருக்கு நேர், உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பாடல்கள் பாடியுள்ள, பவதாரணி, பாரதி படத்தில் இடம் பெற்ற மயில்போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக, சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றிருந்தார். அழகி படத்தில், ஒளியிலேதெரிவது, பிரண்ட்ஸ் படத்தில் தென்றல் வரும் வழி, தாமிரபரணி படத்தில் தாலியே தேவையில்ல, அனேகன் படத்தில் ஆத்தாடி ஆத்தாடி உள்ளிட்ட பல பாடல்கள் பவதாரணி குரலில் ஒலித்த முக்கிய பாடல்களாகும்.
30க்கு மேற்பட்ட தமிழ் படங்களில் பாடியுள்ள பவதாரணி, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு வெளியான மித்ர் மை ப்ரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமான பவதாரணி, அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு வெளியாக மாயநதி என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தனது குரலின் மூலம் மென்மையான பல பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இசையிலும், பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பவதாரணி, சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் உடல் தற்போது சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. பவதாரணி மறைந்தாலும் அவரின் குரலில் வந்த மென்மையான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்திருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“