இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு மரணமடைந்த நிலையில், இவரின் இறுதிச்சடங்கு, சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தந்தையை போலவே இசையமைப்பிலும் அசத்தியுள்ள பவதாரணி தனது தனித்தவமாக குரலின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். 1976-ம் ஆண்டு பிறந்த பவதாரணி, 1995-ம் ஆண்டு பிரபுதேவா, ரோஜா நடிப்பில் வெளியான ராசையா படத்தில் இடம் பெற்ற மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
அதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழில் சில பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல் மனதை மயக்கும் வகையில் அமைந்திருக்கும். 30க்கு மேற்பட்ட தமிழ் படங்களில் பாடியுள்ள பவதாரணி, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளராகவும் அறிமுகமான பவதாரணி, சில படங்களுக்கு இசைமைத்துள்ளார்.
இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணி, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனி பண்ணையபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பவதாரணியின் இறுதி சடங்களில், அவரது திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட நிலையில், இயக்குனரும் பவதாரணியின், சித்தப்பா கங்கை அமரனின் மகனுமான வெங்கட் பிரபு கதறி அழுத நிலையில், அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பவதாரணியின் சகோதரர் யுவன்சங்கர் ராஜா தோல்மீது கை போட்டு தேற்றினார். அதேபோல் பவதாரணியின் உடல் தகனம் செய்யும்போது, அவர் தேசிய விருது வாங்கிய பாடலான மயில்போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை சோகத்துடன் பாடி அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
இளையராஜாவின் சொந்த ஊரான தேனி பண்ணையபுரத்தில், தனது தாய் மற்றும் மனைவி அடக்கம் செய்த அதே இடத்தில் இளையராஜா தனது மகள் பவதாரணியையும் அடக்கம் செய்துள்ளார். சென்னையில் தனது மகளின் உடலை பார்க்க வராத இளையராஜா, இலங்கையில் இருந்து விமானம் வழியாக மதுரை வந்து அவரின் இறுதிச்சடங்கள் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“