கடந்த ஆண்டு இரட்டை குழந்தைக்கு தாயான பாடகி சின்மயி தனது குழந்தைகளுக்கு ஒரு வயதாகும் நிலையில், முதல்முறையாக அவர்களின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடகர் டப்பிங் கலைஞர் என்று அறியப்படும் பாடகி சின்மயி, சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின் செய்த சின்மயி அதன்பிறகு தமிழ் சினிமாவில் பாடகியாக வாய்ப்பு பெற்றார். கடந்த 2002-ம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து, தமிழில் பல பாடல்களை பாடியுள்ள சின்மயி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஜிவி பிரகாஷ் டி.இமான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், என பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் சூர்யா ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவுக்கு குரல் கொடுத்து டப்பிங் கலைஞராகவும் தன்னை நிரூபித்தவர் சின்மயி.
தொடர்ந்து திரிஷா சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்த இவர், கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த சின்மயி கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்த நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை கடைசிவரை வெளியிடவில்லை.
இதனிடையே கடந்த ஆண்டு இவருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில், எப்போது கர்ப்பமானார் இவருக்கு எப்படி குழந்தை பிறந்தது. என்ற கேள்விகள் எழுந்த நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக தகவல்கள் பரவியது. ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதை நிரூபிக்கும் வகையில் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
மேலும் குழந்தை பிறந்த தகவல் வெளியானாலும் குழந்தைகளின் புகைப்படங்களை இதுவரை வெளியிடாத சின்மயி தற்போது தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தைகளின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தங்களது கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“