தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து, கமல்ஹாசனுடன் அடுத்தடுத்து பல படங்களில் இணைந்து நடித்திருந்தார்.
கடைசியாக அவருடன் நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் நடித்த ரஜினிகாந்த், அடுத்து பைரவி என்ற படத்தின் மூலம் தனி ஹீரோவாக உருவெடுத்தார். அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்து வசூல் மன்னனாக இன்றுவரை திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரு ஐஸ்வர்யா சௌந்தர்யா என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்குமே சினிமாவில் நல்ல அறிமுகம் உள்ளது.
அதே சமயம், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், திரைப்படம் தொடர்பான எந்த அறிமுகம் இல்லை என்றாலும், அவர் ஒரு பாடகி என்பவது பலரும் அறியாத ஒரு தகவல். கமல்ஹாசன் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகியுள்ள லதா ரஜனிகாந்த், அந்த படத்தில் நேற்று இந்த நேரம் என்ற பாடலை பாடியிருந்தார். அதன்பிறகு லதா பாடிய அனைத்து பாடல்களுமே ரஜினிகாந்த் நடித்த படத்தில் தான் பாடியுள்ளார்.
குறிப்பாக ரஜினிகாந்த் சிறப்பு தொற்றத்தில் நடித்திருந்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், பெரிய ஹிட் பாடலாக இடம் பெற்றிருந்த ‘’கடவுள் உள்ளமே கருணை இல்லமே’’ என்ற பிரார்த்தனை பாடலை லதா ரஜினிகாந்த் பாடியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் கவிஞர் வாலி 3 பாடல்களை எழுதியிருந்தார். அதில் ஒரு பிரார்த்தனை பாடல் தான் கடவுள் உள்ளமே பாடல். இந்த பாடல் இன்றுவரை ரசிகாகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடலை எழுதிய கவிஞர் வாலி ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கடைசிவரை வாலிப கவிஞராக போற்றப்பட்ட கவிஞர் வாலி, பல பிரார்த்தனை பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“