கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தபோது அவர்கள் இசையில் வாசித்த பல கலைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள். கொரோனா காலக்கட்டத்தில் கூட அவர்களுக்கு சரியான உதவிகள் செய்யப்படவில்லை என்று பாடகர் மனோ தனது ஆதரங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திரை இசை கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலில் வாக்களித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த பாடகர் மனோ, 5 வருடத்திற்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 வருடத்தில், அதிகமாக கலைஞர்கள் நலிந்த கலைஞர்கள், வயதானவர்கள், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இசையில் வாசித்த அற்புதமான கலைஞர்கள், இன்னும் இருக்கிறார்கள்.
அவர்களால் நடக்க முடியாமல், நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். சினிமா துறையில் முதலில் தொடங்கப்பட்டது இசைக்கலைஞர்கள் சங்கம் தான். ஆனால் இதற்கு சரியான கட்டிடங்கள் எதுவும் இல்லை. இளையராஜா சார் எங்களுக்கு உதவி செய்யலாம் என்று பார்க்கும்போது, கொரோனா காலக்கட்டம் வந்துவிட்டது. இந்த தேர்தல் முடிவில் வரும் ஆட்சி கண்டிப்பாக இசை கலைஞர்களுக்கு, இப்போது வரும் இளம் கலைஞர்களுக்கு டிஜிட்டப் ப்ளாட்ஃபார்ம் உருவாக்க வேண்டும்.
நிறைய சாதிப்பதற்கு இந்த சங்கம் மூலமாக எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, செயல்பட வேண்டும். மற்ற சங்கங்கள் கலைஞர்கள் இறந்துபோனால் அவர்கள் குடும்பத்திற்கு 3-4 லட்சம் பணம் கொடுக்கும் நிலையில், இருக்கிறார்கள். ஆனால் இசைக்கலைஞர்கள் சங்கம் ஒரு லட்சம் கூட கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக விஷயம்.
அதனால் இனிமேல் வரும் கலைஞர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த இசை கலைஞர்கள் சங்கத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன். நிச்சயமாக தர்மம் வெல்லும். கொரோனா காலக்கட்டத்தில் கலைஞர்களுக்கு உதவி செய்யாததற்கு இசையமைப்பாளர் தினாவை தான் நான் சொல்வேன். அவர் முயற்சி எடுத்திருந்தால், மற்ற கலைஞர்கள் துணையாக இருந்திருப்பார்கள்.
கொரோனா காலக்கட்டத்தில் நான் தனிப்பட்ட முறையில், 250 கலைஞர்களுக்கு மாதா மாதம் பொருட்கள் அனுப்பி வந்தேன். அந்த அளவிற்கு கூட சங்கத்தில் இருந்து யாரும் உதவி செய்யவில்லை. இதற்கு ஒருவரை மட்டும் சொல்லி குற்றமில்லை. இனிமேல் வரும் ஆட்சியாளர்கள் கலைஞர்கள் முதியவர்கள் என அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும்.
எது செய்தாலும் தர்மம் வெல்லும். அதுதான் நம்பிக்கை. நான் பாடினால் தான் காசு கிடைக்கும். என் பையன் வந்து பாடுகிறேன் என்றால் கொடுக்கமாட்டார்கள். இசை கலைஞர்கள் தங்கள் உதவியாளர்களை வைத்து இசை அமைத்துவிடலாம். ஆனால் பாடல் பாடுவது என்பது, இறைவன் கொடுத்தால் தான் பாட முடியும். அதனால் நாம் கஷ்டப்பட்டு வந்ததுக்கு இந்த இசை கலைஞர்கள் சங்கம் நல்லா இருக்கனும்.
பி.சுசிலா, ஜானகி டி.எம்.எஸ். உள்ளிட்ட பலர் விட்டுச்சென்றது எவ்வளவோ இருக்கிறது. அதை நம்பி இருக்கும் கலைஞர்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“