தமிழ் திரையுலகில் நல்ல இசை மற்றும் பாடகர்கள் இல்லை கோடம்பாக்கம் தூங்குகிறது என்று பழம்பெரும் பாடகியான பி.சுசீலா வேதனை தெரிவித்துள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்த பி.சுசீலா, பல முன்னணி நடிகைகளுக்கும் தனது இனிமையான குரலின் மூலம் வெற்றியை கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா இன்றும் அவரது பாடல்களை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்று சொல்லலாம்.
தற்போது பாடல்கள் பாடுவதில் இருந்து விலகி இருக்கும் சுசீலா, சமீபத்தில் திருப்பதியில் மொட்டையடித்துக்கொண்டு சாமி தரிசனம் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இதனிடையே சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகி பி.சுசீலா, கோடம்பாக்கம் தூங்குகிறது. நல்ல இசை இல்லை, நல்ல பாடகர்கள் இல்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சேலத்தை மையமாக கொண்ட தனியார் இசை குழுவின் 35-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பழம்பெரும் பாடகி பி.சுசீலா, இபபோது என் உடலில் சக்தி இல்லை, இருந்திருந்தால் இன்றைய கால பாடகர்களுடன் நானும் பாடுவேன். கடவுள் இன்னும் தேர்வு எழுத என்னை அனுமதித்திருக்கிறார். இன்னும் இருந்து இதையெல்லாம் நான் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் போல. கோடம்பாக்கம் எல்லாமே தூங்குகிறது. நல்ல இசை இல்லை. பாடகர்கள் இல்லை.
என்ன செய்வது என்று தெரியவில்லை.
இதை நினைத்தால் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் இருந்த காலக்கட்டத்தில் சந்தோஷனமா ஒரு ஃபேமிலி மாதிரி ரூம்குள்ள போயாச்சு என்றால் பாட்டு தான். ஆனால் இன்று அப்படியா? என்று பாடகி பி.சுசீலா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil