தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ஒரு படத்தில் பாடல் பாட மறுத்து, ஒருவரின் வற்புறுத்தலால் பாடிய நிலையில், அந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். 1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்தள்ளார்.
ஒரு கட்டத்தில் எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என ஓய்வில்லாமல் அனைத்து மொழிகளிலும் பாடல்கள் பாடிக்கொண்டிருந்துள்ளார். இதனிடையே ஒரு படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் பாட எஸ்.பி.பி-க்கு வாய்ப்பு வந்த நிலையில், இந்த பாடல்களை தன்னால் பாட முடியாது என்று ஒதுங்கிக்கொள்ள, இசையமைப்பாளிரிடம் உதவியாளராக இருந்த ஒருவர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக பாடிய எஸ்.பி.பிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
1980-ம் ஆண்டு கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான படம் சங்கராபரணம். சோமயாஜூலு, மஞ்சுபார்கவி ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியிருந்தார். முதலில் இந்த பாடல்களை பாட எஸ்.பி.பி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கே.வி.மகாதேவன், வேறு ஒருவரை வைத்து பாட வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.
ஆனால் அவரிடம உதவியாளராக இருந்த புகழேந்தி என்பவர், இந்த பாடல்களை எஸ்.பி.பி பாடினால் தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து, தனது குரலில் இந்த பாடல்களை பதிவு செய்து எஸ்.பி.பியிடம் கொடுத்துள்ளார். இந்த பாடல்களை கேட்டு பயிற்சி எடு. உன்னால் பாட முடியும் என்று எப்போது தோன்றுகிறதோ அப்போது ரெக்கார்டிங் வைத்துக்கொள்ளலாம். இதேபோல் பாடாதே உன் தனித்தன்மையை இழந்துவிடுவாய். இதை கேட்டுவிட்டு உன் ஸ்டைலில் பாடு என்று கூறியுள்ளார்.
இதை ஏற்றுக்கொண்ட எஸ்.பி.பி, அவர் சொன்னபடியே பயிற்சி செய்து, அனைத்து பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட்டடித்த நிலையில், எஸ்.பி.பி.க்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதில் சில பாடல்களை எஸ்.பி.பியுடன் இணைந்து வாணி ஜெயராம் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“