தமிழ் சினிமாவில் தங்க குரலுக்கு சொந்தக்காரர் என்று போற்றப்படும் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், பக்தி படம் ஒன்றில், நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்காக விரதம் இருந்து கிருபாணந்த வாரியாரிடம் ஆலோசனை பெற்று பாடியுள்ளார். அந்த பாடல் வெற்றி பெற்றதா?
தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது தனித்திறமையின் மூலம் திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய இவர், எந்த நடிகருக்காக பாடினாலும் திரையில், அந்த நடிகரே பாடும் அளவுக்கு அவர்களின் குரல் போன்ற தோற்த்தில் பாடும் திறன் பெற்றவர்.அதேபோல் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் டி.எம்.சௌந்திரராஜன்.
1962-ம் ஆண்டு வெளியான பட்டினத்தார் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். கே.சோமு இயக்கிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து 1964-ம் ஆண்டு வெளியாக அருணகிரி நாதர் என்ற படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சாரதா பி.எஸ்.சரோஜா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு, ஜி.ராமநாதன், டி.ஆர்.பாப்பா ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், 2 பாடல்களை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் டி.எம்.சௌந்திரராஜனே பாடியிருந்தார். குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘’முத்தைத்தரு பத்தித் திருநகை’’ என்ற பாடல், முருகனின் முக்கிய பாடல்களில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் மிகவும் சிரமப்பட்டு பாடிய ஒரு பாடல் என்று சொல்லலாம்.
இந்த பாடலை அருணகிரி நாதரே எழுதியிருந்த நிலையில், இந்த பாடலை நீங்கள் தான் பாட வேண்டும் என்று இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா டி.எம்.சௌந்திரராஜனிடம் கூறியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கான மெட்டை நான் போட்டுவிட்டேன். ஆனால் இந்த பாடலை எப்போது பாட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அப்போது பாடுங்கள் என்று கூறியுள்ளார். அருணகிரி நாதரே முருகனை நினைத்து பாடிய பாடல் என்பதால், இந்த பாடலை பாட டி.எம்.எஸ் தயங்கியுள்ளார். அதே சமயம் இந்த பாடலின் பொருள் தெரியாது என்றும் யோசித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த பாடலை பாட முடிவு செய்த டி.எம்.எஸ், அதற்காக முதலில், முருகன் மீது பக்தியாக விரதம் இருந்துள்ளார். அதன்பிறகு இந்த பாடலை பாடி பாடி பயிற்சி பெற்ற அவருக்கு, பாடலின் பொருள் மட்டும் விளங்கவே இல்லை. அதன்பிறகு கிருபாணந்த வாரியாரிடம் சென்ற டி.எம்.எஸ், இந்த பாடல் பாடுவது குறித்து சொல்லிவிட்டு, இந்த பாடலுக்கான பொருளை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு வாரியார் இந்த பாடலுக்கான பொருளை விளக்கி அதற்கான புரணங்கள் பற்றியும் கூறியுள்ளார்.
அதன்பிறகு சில நாட்கள் பயிற்சி எடுத்த டி.எம்.எஸ், இப்போ நான் பாடல் பதிவுக்கு தயார் என்று சொல்ல, பாடல் பதிவு தொடங்குகிறது, பாடல் பாட உள்ளே வந்த டி.எம்.எஸ், 5 நிமிடம் கண்களை மூடிக்கொண்டு, முருகனை நினைத்து வேண்டிக்கொண்டு பாடல் பாட தொடங்குகிறார். அருணகிரி நாதர் எப்படி பாடினாரே அதை அப்படியே பாடி முடித்துள்ளார். இந்த பாடல் இன்றும் ஒரு முக்கிய பாடலாக கடவுள் முருகனின் பெருமை சொல்லும் பாடலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.