தமிழ் சினிமாவில் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் அவர் டி.எம்.சௌந்திரராஜன் தான். சிவாஜிக்கு, அவர் மாதிரியும், எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரியும் பாடல்கள் பாடி அசத்தியுள்ள இவர், தமிழ் சினிமாவில் 70-க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் அவர்கள் பாடுவது போன்றே பாடி அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Advertisment
ஒரு சில படங்களிலும் நடித்துள்ள டி.எம்.எஸ். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர். எந்த நடிகராக இருந்தாலும், அவரை மாதிரியே பாடக்கூடிய திறன் கொண்ட டி.எம்.சௌந்திரராஜன், ஒரு பாடலில் 4 நடிகர்கள் பாடுவது போன்ற காட்சிக்கு 4 பேருக்கும் சேர்த்து டி.எம்.எஸ் பாடியுள்ளார். அதுவும் அவர்கள் பாடுவது போன்ற குரலிலேயே பாடி அசத்தியுள்ளது தான் பலரையும் அச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு உண்மை சம்பவம்.
1967-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் பாமா விஜயம். பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ், சவுகார் ஜானகி, ஜெயந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரான பாலையா வரவுக்கு மீறிய செலவு செய்யும் பெண்ணுக்கு உணர்த்துவது போன்ற ஒரு பாடலை வைத்திருப்பார்.
இந்த பாடலை கண்ணதாசன் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று கே.பாலச்சந்தரின் உதவியாளர் சொல்ல, அதன்பிறகு பாலச்சந்தர் கண்ணதாசனை சந்தித்துள்ளார். இந்த படம் தான் கண்ணதாசன் – பாலச்சந்தர் இணைந்து பணியாற்றிய முதல் படம். இந்த படத்தின் கதையை சொன்ன பாலச்சந்தர், இந்த பாடல் எங்கு வர வேண்டும் என்பதை சொன்னவுடன், உடனடியாக கண்ணதாசன் எழுதிய பல்லவி தான் ‘’வரவு எட்டனா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா’’ என்ற பாடல்.
இந்த பாடலை கேட்டவுடன் பாலச்சந்தருக்கு பிடித்துவிட உடனடியாக படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இந்த பாடலை 4 பேர் சேர்ந்து பாடுவது போல் கே.பாலச்சந்தர் கட்சியமைத்திருப்பார். ஆனால் 4 பாடகர்கள் கிடையாது ஒரே பாடகர் தான் 4 பேருக்கும் பாடியிருப்பார். அவர் தான் டி.எம்.சௌந்திரராஜன். இந்த பாடலில் பாலையா, நாகேஷ், முத்துராமனட், மேஜர் சுந்தர்ராஜன் ஆகிய 4 பேருக்கும் அவரவர் குரலில் அவர்களே பாடுவது போன்று டி.எம்.எஸ் பாடியிருப்பார். எல்.ஆர்.ஈஸ்வரி அவருடன் இணைந்து படியிருந்தார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“