சாதாரன மக்களில் தொடங்கிய பெரும் பணக்காரர்கள் வரை அனைவருக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது சினிமா. உலகளவில் பெரும் பகுதி மக்கள் சினிமா ரசிகர்களாக உள்ளனர். சினிமா மட்டுமல்லாமல் அதில் வரும் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இசை தொடர்பான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அன்றைய காலகட்டத்தில் படங்களில் இடம்பெற்ற பாடல் மட்டுமல்லாமல் அந்த பாடலை பாடிய பாடகர் மற்றும் பாடகிகளுக்கும் ரசிகர்கள் மனத்தில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அது இன்றைய காலகட்டத்திலும் தொடர்ந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 50 வருடங்களாக இந்திய சினிமாவில் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் குடியிருந்து வருபவர் பிரபல பாடகி வாணி ஜெயராம்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பிறந்து மும்பையில் இந்தி சினிமாவை தன்பக்கம் இழுந்த பெருமைக்கு சொந்தக்காரரான வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தனது குரலை பாடல்கள் மூலம் ஆழமாக பதித்துள்ளார்,
தமிழகத்தின் வேலூரில் ஒரு இசைக்குடும்பத்தில் 8-வது குழந்தையாக பிறந்தவர்தான் வாணி ஜெயராம். பிறப்பில் இருந்தே இசையால் வளர்க்கப்பட்ட வாணி ஜெயராம்க்கு ஒரு கட்டத்தில் இசை மீது அதீத ஆர்வம் வருகிறது. அப்போது பீக்கில் இருந்த இலங்கை வாணொலியில் வரும் பாடல்களை கேட்டு தானும் பாடகி ஆக வேண்டும் என்று நினைத்து அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்கிறார்.
சென்னையில் படிப்பை முடித்து ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்து வந்த வாணி ஜெயராம், தனது இசை தாகத்திற்கு உரிய வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த வேலை மும்பைக்கு மாற்றம் ஆன பிறகு, அங்கு வேலை பார்த்துக்கொண்டே உஸ்தாத் அகமது கான் என்பரிடம் இசை கற்றுக்கொள்கிறார். அதன்பிறகு அங்கு சிறியதாக கச்சேரிகள் செய்ய தொடங்குகிறார்.
வாணி ஜெயராம் இசையின் பக்கம் செல்ல அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரது கணவர் ஜெயராம். இதனால் தான் கலைவாணி என்ற பெயரை மாற்றி வாணி ஜெயராம் என்று வைத்துக்கொண்டார். இவர் மும்பையில் ஒருமுறை கச்சேரி செய்யும்போது அதை பார்த்த அப்போதைய பாலிவுட் திரைப்படங்களின் முன்னணி இசையமைப்பாளரான வசந்த் தேசாய், ஆச்சரியடைந்து நீங்கள் சினிமாவில் பாடல் பாட முடியுமா என்று கேட்கிறார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட வாணி ஜெயராம் உடனடியாக சம்மதம் தெரிவிக்க, அப்போது பாலிவுட்டில் வெளியாகி குட்டி என்ற படத்தில் போலோரே பப்பிஹரி என்ற பாடலை வாணி ஜெயராம் பாடினார். இந்த படத்தின் 3 பாடல்களையும் வாணி ஜெயராம் தான் பாடியுள்ளார். மேலும் குட்டி படம் 1971-ம் ஆண்டு திரைக்கு வந்தது. படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அனைவரும் வாணி ஜெயராம் பற்றி பேச தொடங்குகின்றனர்.
குட்டி படம் தமிழில் சினிமா பைத்தியம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திலும், என் உள்ளம் அழகான வெள்ளித்திரை என்ற பாடலை பாடியிருந்தார். அதனைத் தொடர்து வாணி ஜெயராமை தமிழுக்கு அழைத்து வந்த எம்.எஸ்.வி தீர்க்க சுமங்கலி என்ற படத்தில். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொண்ணான மலர் அல்லவோ என்ற பாடலை பாடியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து எம்.எஸ்.வி தனது பல படங்களில் வாணி ஜெயராமை பாட வைத்திருந்தார்.
தமிழில் எம்.ஜி.ஆருக்கான பல பாடல்களை பாடியுள்ள வாணி ஜெயராம் 3 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றுள்ளார். மாறுபட்ட பாடல்களை பல மொழிகளில் பாடி அசத்தியுள்ள வாணி ஜெயராம், இந்தியாவில் சினிமா தயாரிக்கும் அனைத்து மொழிகளிலும் தனது குரலை பதிவு செய்துள்ளார். வேறு மொழிகளில் பிறந்து தமிழில் கோளாச்சிய பலர் இருந்தாலும் தமிழில் பிறந்த வாணி ஜெயராம் இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகியாக வலம் வந்தவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil