தமிழ் சினிமாவில் தனது நடிப்புத்திறமையின் மூலம் நடிகர் திலகம் என்று பெயரேடுத்தவர் சிவாஜி கணேசன். நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படும் இவர், 1952-ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதேபோல் அந்த படத்தில் இன்னொரு முக்கிய பிரபலமும் நடிகராக அறிமுகமாகி இருந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்
1952-ம் ஆண்டு கிருஷ்ணன் –பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் பராசக்தி. மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அமைந்த இந்த திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். கருணாநிதி வசனம் எழுதியிருக்கிறார் என்றதும், இந்த படத்திற்கு கடுமையான எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் இருந்தது. பல மாதங்களாக தயாரிப்பில் இருந்த பராசக்தி படம் ஒருவழியாக வெளியானது.
அக்டோபர் 17 1952-ல் தீபாவளி தினத்தில் வெளியான பராசக்தி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வெள்ளி விழா கொண்டாடியது. இந்த படத்திற்கு பின் சிவாஜிக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருந்த நிலையில், அவருக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதேபோல் இந்த படத்தின் மூலம் கவியரசர் கண்ணதாசனும் நடிகராக அறிமுகமாகி இருந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் இன்றளவும் நிலைத்திருக்கும் கவிஞர் கவியரசர் கண்ணதாசன். மனிதனில் ஏற்படும் அனைத்து உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் ஆறுதல் கூறியுள்ள கண்ணதாசன், சினிமாவில் சிறப்பு தொற்றத்திலும், ஒருசில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் கண்ணதாசன் நடிகராக அறிமுகமான முதல் படம் சிவாஜி கணேசன் நடிகராக அறிமுகமான பராசக்தி திரைப்படம் தான்.
/indian-express-tamil/media/media_files/zPVHigKkgvnLK2NudwwC.jpg)
பராசக்தி படத்தில், க்ளைமேக்ஸில் வரும் நீதிமன்ற காட்சி இன்றளவும் பேசப்படும் ஒரு காட்சியாக உள்ளது. இந்த காட்சியில் நீதிபதியாக கெஸ்ட் ரோலில் நடித்தவர் தான் கண்ணதாசன். அதே சமயம் பராசக்தி படத்தில் நடித்ததற்கு பின் அடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த கண்ணதாசன், 1960-ம் ஆண்டு தானே எழுதி தயாரித்து இயக்கிய கவலை இல்லாத மனிதன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சந்திரபாபு நாயகனாக நடித்திருந்தார்.
அடுத்து 1963-ம் ஆண்டு வெளியான ரத்த திலகம் படத்தில் ஒரு காட்சியில் தோன்றி பாடல் பாடியிருப்பார். ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’’ என்ற அந்த பாடல் இன்றும் அனைவரும் பேசக்கூடிய ஒரு பாடலாக உள்ளது. 1964-ம ஆண்டு வெளியான கருப்பு பணம் திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் கண்ணதாசன் நடித்திருந்தார். 1979-ம் ஆண்டு வேலும் மயிலும் துணை என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த கணணதாசன், கடைசியாக 1981-ம் ஆண்டு வெளியான தெய்வ திருமணங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“