தமிழ் சினிமாவில் தனது நடிப்புத்திறமையின் மூலம் நடிகர் திலகம் என்று பெயரேடுத்தவர் சிவாஜி கணேசன். நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படும் இவர், 1952-ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், அதற்கு முன்பே தனது குரலை தமிழ் சினிமாவில் பதிவு செய்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1952-ம் ஆண்டு கிருஷ்ணன் –பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் பராசக்தி. மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அமைந்த இந்த திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். கருணாநிதி வசனம் எழுதியிருக்கிறார் என்றதும், இந்த படத்திற்கு கடுமையான எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் இருந்தது. அதேபோல் சிவாஜியை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று ஏ.வி.எம்.நிறுவனமே கூறியது.
இந்த படத்தை தயாரித்த பி.ஏ.பெருமாள் முதலியார் சிவாஜியை வைத்து தான் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால், ஏ.வி.எம்.நிறுவனம் பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து பல மாதங்களாக தயாரிப்பில் இருந்த பராசக்தி படம் ஒருவழியாக வெளியானது. அக்டோபர் 17 1952-ல் தீபாவளி தினத்தில் வெளியான பராசக்தி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வெள்ளி விழா கொண்டாடியது.
இந்த படத்திற்கு பின் சிவாஜிக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருந்த நிலையில், அவருக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதே சமயம் பராசக்தி படத்திற்கு முன்பே சிவாஜி ஒரு டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் கால்பதித்துவிட்டார் என்பது சிவாஜி ரசிகர்களே அறியாத ஒரு தகவல். தமிழ் சினிமாவில் முதல் பேசும் படம் இயக்கியவர் எச்.எம்.ரெட்டி.
இவரது இயக்கத்தில் 1931-ம் ஆண்டு வெளியான காளிதாஸ் படம் தான் முதல் பேசும் படம். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கிய எச்.எம்.ரெட்டி 1951-ம் ஆண்டு தெலுங்கில் நிர்டூஷி என்ற படத்தை இயக்கியிருந்தார், இந்த படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை வாங்கிய பி.ஏ.பெருமாள் முதலியார், இந்த படத்தில் நடித்த முக்காமலா கிருஷ்ணா என்ற நடிகருக்காக தமிழில் குரல் கொடுக்க சிவாஜியை அழைத்துள்ளார்.
தான் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே வந்த இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட சிவாஜி, அந்த படத்தில் டப்பிங் பேசிவிட்டு, அதற்கு சம்பளமாக ரூ500 பெற்றுள்ளார். தான் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே தனது குரலை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சிவாஜி கணேசன். அதன்பிறகு 1952-ல் பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி, அதன்பிறகு யாருக்கும் டப்பிங் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“