நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் நடிகர் சிவாஜி, தமிழ் சினிமா கருப்பு வெள்ளை காலக்கட்டத்தில் இருந்தபோதே, சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு காட்சிக்கு தொடர்ச்சியா 850 அடி வசனம் பேசி நடித்துள்ளார்.
1956-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் ராஜா ராணி. சிவாஜி பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், என்.எஸ்.கிருஷணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, டி.ஆர்.பாப்பா இசையமைத்திருந்தார். அதேபோல் கருணாநிதி, மருதகாசி, ஆதமநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்திற்கு பாடல் எழுதியிருந்தனர். கருணாநிதியின் கதை திரைக்கதையில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில், சேரன் செங்குட்டுவன் என்ற ஒரு ஓராங்க நாடகம் படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த நாடகம் அதிக கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த நாடகத்தை அப்போதே ஒரே ஷாட்டில் (சிங்கிள் ஷாட்) படமாக்கியிருப்பார் இயக்குனர் பீம்சிங். இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்பாக அந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இயக்குனர் பீம்சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த காட்சியை ஒரு ஷாட்டில் படமாக்கினால் ரொம்ப நல்லாருக்கும். ஆனால் 850-அடிக்கும் வசனத்தை இடைவிடாமல் பேச வேண்டும். அதற்கு சிவாஜி ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் படக்குழுவினருக்கு இருந்துள்ளது. இதை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த சிவாஜி, அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் 850 அடிக்கும் வசனம் பேசி நடிக்க தயார். நீங்கள் ஒரே ஷாட்டில் படமாக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு சிவாஜி 850 அடிக்கும் வசனம் பேச தயாராகிக்கொண்டிருந்த நிலையில், பீம்சிங் அந்த காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்க திட்டமிட்டுக்கொண்டிருந்தார். அதன்படி சிவாஜி ரெடியானதும் இந்த காட்சி படமாக்கப்பட்டது. திட்டமிட்டபடி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இந்த காட்சியில் கலைஞரின் அனல்பறக்கும் வசனங்களை ஒரு இடத்தில் கூட தடையின்றி சிவாஜி தொடர்ச்சியாக பேசி நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அவர் நடித்து முடித்தவுடன் ஸ்டூடியோவில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டியுள்ளனர். தமிழ் சினிமாவில் ஒரே ஷாட்டில் முழுதாக 850 அடிக்கு வசனம் பேசி நடித்த ஒரே நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன் மட்டும் தான் என்று பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“