சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'அயலான்' சில வருட தாமதத்திற்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை (ஜனவரி 12) ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த அயலான் படம் ஒரு ஏலியன் தொடர்பான சையின்ஸ்பிக்ஷன் கதையாகும். சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு கருணாகரன், ஆகியோர் நடித்துள்ளனர். ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
தற்போது"அயலான்" திரைப்படம் மலேசியாவில் P12 மதிப்பீட்டில் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியான தகவலின்படி, அயலான் ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்றும், பொங்கல் பண்டிகைக் காலத்தில் குழந்தைகளுடன் பார்க்க சிறந்த படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் மூவிஸ் சிங்கப்பூர் வெளியிட்டுள்ள பதிவின்படி, பிபிஎஃப்சியில் இருந்து திரைப்படம் "12A" மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. செயல், நகைச்சுவை மற்றும் கற்பனைக் கூறுகளின் கலவையாக இந்த படம் உள்ளது. ஒரு மிதமான வன்முறை காட்சிகளுடன், இரக்கமற்ற விஞ்ஞானிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க, ரசிகர்களுக்கு ஈர்க்கக்கூடிய மற்றும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை உருவாக்க, மனிதர்களின் சாத்தியமில்லாத குழுவை நம்பியிருக்க வேண்டிய ஏலியனை சுற்றி கதை நகர்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'அயலான்' பல மொழிகளில் திரைக்கு வர உள்ளது, இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படமாக பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்று பலரும் டிரெய்லரை பார்த்து கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“