சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில், இதுவரை அவர் எடுக்காத ரிஸ்கை அமரன் படத்தில் எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த பொங்கல் தினத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், அடுத்து ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சிவகார்த்திகேயன் தள்ளப்பட்டுள்ளார்.
இடையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சிவகார்த்திகேயனிடம், என் இடத்தில் நீ இருந்து பார்த்துக்கொள் என்று விஜய் பேசிய டைலாக், விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால், சினிமாவில் அவரின் இடத்தை நிரப்ப, சிவகார்த்திகேயன் தான் சரியாக நடிகர் என்று விஜய் சொல்லிவிட்டதாக பலரும் கூறி வருகின்றனர். இதனால் அவரின் படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில், அடுத்து தீபாவளி தினத்தில், வெளியாக உள்ள அமரன் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தை, கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள நிலையில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சாய் பல்லவி இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு, வரும் அக்டோபர் 31-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயன், இதுவரை எடுக்காத ரிஸ்கை இந்த படத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த மேஜர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் க்ளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவது போன்ற காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுவரை தான் நடித்த படங்களில் மகிழ்ச்சியான க்ளைமேக்ஸ் இருப்பதாக பார்த்துக்கொண்ட சிவகார்த்திகேயன் இந்த படத்தில் தான் இறப்பது போன்ற காட்சியில் நடித்துள்ளார். உண்மையில் அமரன் படத்தின் க்ளைமேக்ஸ் மிகவும் எமோஷ்னலாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“