முதன்முறையாக சிவகார்த்திகேயன் நடித்த பேண்டஸி கமர்சியல் படமான "மாவீரன்" இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
கதைக்களம் :
சென்னையில் காலம் காலமாக வாழ்த்து வரும் ஏழை மக்களை,அந்த ஏரியாவிலிருந்து அப்புறப்படுத்தி மந்திரியான ஜெயக்கொடியால் (மிஷ்கின்) அந்த மக்களை "மக்கள் மாளிகை" அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றி விடுகின்றனர். இதில் ஒரு குடும்பமாக தன் அம்மா, தங்கச்சியுடன் புதிய வீட்டிற்கு குடியேறுகிறார் நாயகன் சத்யா (சிவகார்த்திகேயன்). ஆனால் வந்த முதல் நாளே அந்த குடியிருப்பு தரமாக இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் எழுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் போகாமல் எதையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழும் தைரியம் இல்லாத சிவகார்த்திகேயனுக்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த அடி ஏற்படுகிறது.
சாவின் எல்லை வரை சென்று உயிர்பிழைக்கும் அவருக்கு அதன் பிறகு ஏதோ ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தக் குரலைக் கேட்டு நடக்கும் சிவகார்த்திகேயன் வாழ்வில், அடுத்தடுத்து அமைச்சரான மிஷினுடன் மோதும் சூழ்நிலைகள் வருகிறது. இதிலிருந்து சிவகார்த்திகேயன் மீண்டு வந்தாரா? தன் மக்களை அந்த தரமற்ற குடியிருப்பில் இருந்து காப்பாற்றினாரா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
சிவகார்த்திகேயன் :
தன் குடும்பத்தை கருத்தில் கொண்டு எந்த பிரச்சனைக்கும் செல்லாமல் தானுண்டு தன் வேலை உண்டு என நிஜத்தில் வாழும் பல நடுத்தர இளைஞர்களின் பிரதிபலிப்பாகவே தன்னை திரையில் காட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். முந்தைய படங்களில் இல்லாத அளவிற்கு,இப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார், சண்டை என்றால் அடிதடி மட்டுமல்லாமல், சில குறும்புத்தனமான சண்டை காட்சிகள் மூலம் குழந்தைகளையும் பெருமளவில் கவர்ந்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் கோழை, வீரம்,ஏமாற்றம்,கோபம், சந்தோஷம்,சோகம் என பல்வேறு பரிமாணங்களில் தன் நடிப்பை அழகாகவும், ஆழமாகவும் கொடுத்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். துள்ளலான நடனத்தின் மூலம் ரசிகர்களை குஷி படுத்தியும் இருக்கிறார்.
மற்ற நடிகர்களின் நடிப்பு :
கம்பீரமான அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது மிஷ்கினின் முகம். மிஷ்கினும் அவருடைய நண்பர் சுனிலும் சேர்ந்து அக்மார்க் அரசியல் வில்லத்தனத்தில் ரசிகர்களை மிரட்டி இருக்கிறார்கள். நாயகியான அதிதிக்கு ஒரு சின்ன ரோல் என்றாலும் அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார் மேலும் நாயகனின் அம்மாவாக வரும் சரிதாவும் தன்னுடய எதார்த்தமான நடிப்பால் கலக்கி இருக்கிறார். யோகி பாபுவின் காமெடி காட்சிகள் பல இடங்களில் நம்மை குதூகலப்படுத்துகிறது. விஜய் சேதுபதியின் குரல் படத்தின் சுவாரசியத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.
இயக்கம் மற்றும் இசை :
ஓட்டின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் விதமாக "மண்டேலா" படத்தை கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின், இப்படத்தில் ஏழை மக்களில் வாழ்வாதார பிரச்சனையை கையிலெடுத்து அதை பேண்டஸி கலந்த திரைக்கதையில் கொடுத்திருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்த நிலையில், பரத் சங்கரின் பின்னணி இசை பல இடங்களில் புதுமையை கொடுக்கிறது.
படம் எப்படி ?
படத்தின் முதல் பாதி முழுவதும் கலகலப்பாகவும், எதார்த்தமாகவும் கொண்டு சென்று அதற்குள் தான் சொல்ல வந்த படத்தின் கதையையும் ரசிக்கும் படியாக சொல்லி விறுவிறுப்புடன், எதிர்பார்ப்புடனும் படத்தின் முதல் பாதியை அட்டகாசமாக முடித்த இயக்குனர், இரண்டாம் பாதியில் வழக்கமான
ஹீரோ - வில்லன் மோதலை மையப்படுத்தி கதையை நகர்த்தி லாஜிக் இல்லாத கிளைமாக்சில் முடித்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதி கொடுத்த சுவாரசியத்தை ஓரளவிற்கு இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தாலும் படம் முடியும்போது ஒரு நல்ல கமர்சியல் படத்தை பார்த்த சந்தோஷத்தை கொடுக்கிறது. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பேண்டஸி கதை என்பதால், அவை பெரிய அளவில் நெருடலாக அமையவில்லை. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நம் பொறுமையை சோதிப்பதால், நீளத்தை சற்று குறைத்திருந்தால் இன்னும் மக்கள் ரசிப்பதற்கு உதவியாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு மாஸ் பேண்டஸி கமர்சியல் படமாக நம்மை கவர்ந்திருக்கிறான் இந்த "மாவீரன்"
- நவீன் சரவணன்.