ஒரு பொம்மைக்கு மனிதனுக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி வந்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா'வின் "பொம்மை" படம் மக்களை கவர்ந்திருக்கிறதா?
கதைக்களம் :
ஒரு பொம்மை ஃபேக்டரியில் பொம்மைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார் ராஜ்குமார் (எஸ்.ஜே. சூர்யா). அப்படி வேலை செய்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு பொம்மைக்கு அவர் பெயிண்ட் அடிக்கப் போகும்போது அது தன்னுடைய பழைய பள்ளி காதலியான நந்தினியை (பிரியா பவானி சங்கர்) அவருக்கு நினைவூட்டுகிறது. அந்த நொடியிலிருந்து அவர் அந்த பொம்மையை நந்தினியாகவே நினைத்து காதலிக்கிறார்.
ஒரு வேலை காரணமாக வேறு ஒரு ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது அந்த கடையில் அந்த பொம்மை விற்பனையாகி விடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் ஒரு கொலையாளியாக மாறுகிறார். அதன் பிறகு அந்த பொம்மை வேறு ஒரு கடையில் இருப்பதை பார்த்து அந்த கடையில் வேலைக்கு சேர்ந்து தன்னுடைய காதலை தொடர்கிறார். இவருடைய வாழ்க்கை பொம்மை காதலியுடன் சந்தோஷமாக சென்றதா? அல்லது போலீஸ் இவர் செய்த கொலைகளுக்காக இவரை கைது செய்ததா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு :
பொதுவாகவே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அக்கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பால் உயிரூட்டும் கலைஞர்களுள் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவர். அதேபோல தான் இப்படத்திலும் ஒரு பொம்மையை நிஜம் என நம்பி காதலிக்கும் இளைஞராக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்கிறார். உண்மையாகவே அழகு பொம்மையாக மின்னுகிறார் ப்ரியா பவானி சங்கர். படத்தில் மற்றொரு நாயகியான சாந்தனிக்கு ஒரு சிறிய ரோல் என்றாலும் அது சிறப்பாக அமைந்திருக்கிறது. மற்றவர்களின் நடிப்பும் படத்திற்கு தேவையான அளவு அமைந்திருக்கிறது.
இயக்கம் மற்றும் இசை :
தமிழில் பீல் குட் படங்களை எடுப்பதில் வல்லவரான ராதாமோகனின், இந்த இளைஞன் - பொம்மை காதல் கதை புதுமையாக தோன்றினாலும் திரைக்கதையில் பெரியளவு இப்படம் விறுவிறுப்பையோ, எதிர்பார்ப்பையோ கொடுக்கவில்லை. படத்திற்கு மற்றொரு ஹீரோவாக இருக்கிறது யுவன் சங்கர் ராஜாவின் இசை. பல இடங்களில் இவருடைய இசைக்காக மட்டுமே கைத்தட்டல்கள் வருவதையே இவரின் இசைக்கான அங்கீகாரமாக நாம் பார்க்கலாம்.
படம் எப்படி :
ஒரு இளைஞன்,ஒரு பொம்மையை தன் காதலியாக நினைத்து காதலிக்கிறான் என ஒரு வரியை மட்டுமே புதுமையாக வைத்துக் கொண்டு அவரால் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்த முடியவில்லை என்பதே உண்மை. முதல் பாதியின் வேகமும், திரைக்கதையும் படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அதை ஓரளவிற்கு சரிபடுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, ஒரு நடிப்பு அரக்கனாக அவரை நம் முன்னே காட்டுகிறது.
மொத்தத்தில் ராதாமோகனின் இந்த வித்தியாசமான முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“