தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள அமரன் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு போட்டியாக கவின் நடித்து வரும் பிளாடி பெக்கர் என்ற படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் அமரன். ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள நிலையில், புவன் அரோரா, ராகுல்போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இளம் நடிகர் கவின் களத்தில் இறங்கியுள்ளார்.
இயக்குனராக இருந்த நெல்சன் திலீப் குமார் தயாரிப்பாளராக மாறியுள்ள படம் பிளாடி பெக்கர்ஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே பிளாடி பெக்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமரன் படமும் தீபாவளி தினத்தில் வெளியாவதால் தற்போது சிவகார்த்திகேயன் – கவின் தீபாவளி தினத்தில் நேரடியாக மோத உள்ளனர்.
பிளாடி பெக்கர் படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் திலீப் குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்தவர். அதேபோல் கடைசியாக அவர் இயக்கிய ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“