காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில், சமீபத்தில் வெளியான கருடன் படம் வசூலில் சாதனை படைத்து வருவது, படக்குழுவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், சிறுசிறு வேடங்களில் நடித்து, வென்னிலா கபடிக்குழு படத்தின் மூலம் கவனிக்கப்படும் காமெடி நடிகராக உயர்ந்தவர் சூரி. தொடர்ந்து மனம்கொத்தி பறவை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்த சூரி, பல படங்களில் முன்னணி நடிகர்களின் நண்பராக முக்கிய கேரக்டரில் நடித்து புகழ் பெற்றார்.
தொடர்ந்து காமெடி நடிகராக தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக உருவெடுத்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சூரியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களும் குவிந்தது.
இதனையடுத்து சூரி நாயகனாக நடித்த 2-வது படம் கருடன். காக்கிச்சட்டை, கொடி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். சசிகுமார் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சூரி சொக்கன் என்ற கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் கடந்த மே 31-ந் தேதி வெளியானது.
விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்த கருடன் படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை 27 கோடிக்கு மேல் வசூலித்துள்ள கருடன் படம், தமிழகத்தில் மட்டும் ரூ20 கோடி வசூலித்துள்ளது. இதனால் செம்ம சந்தோஷத்தில் இருக்கும் சூரி அடுத்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களுமே தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக மாறியுள்ளது,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“