வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி,விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்துள்ள “விடுதலை” படத்தின் விமர்சனம்.
கதைக்களம்:
அருமபுரி என்னும் ஊருக்கு அருகே சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால் அதனை எதிர்க்க மக்கள் படை தலைவனாக இருக்கும் விஜய் சேதுபதி முடிவு செய்கிறார். அதற்காக ரயில் குண்டு வெடிப்பு, காவலர்களை கொல்வது என பலவித தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார். ஆனால் போலீசிற்கு விஜய் சேதுபதி யார்? என்றே தெரியாது.
இந்நிலையில் போலீஸ் மேல் அதிகாரிக்கு டிரைவராக வேலைக்கு சேரும் “சூரி” ஒரு சில முறை விஜய் சேதுபதியை பார்த்து விடுகிறார். ஆனால் தன்னுடைய மேலதிகாரியான சேத்தன் சொல்வதை மீறி நடந்ததால், அவருக்கு மெமோ வழங்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
இதனிடையே மக்கள் படைதலைவனை பிடிக்க புதிய அதிகாரியாக, “கௌதம் மேனன்” நியமிக்கப்படுகிறார். இறுதியில் போலீஸ் விஜய் சேதுபதியை கண்டுபிடித்தார்களா? சூரி மீண்டும் தன் பணிக்கு திரும்பினாரா? என்பதே படத்தின் கதை.
நடிகர்களின் நடிப்பு
காமெடியான சூரி எப்படி வெற்றிமாறன் படத்திற்கு நாயகனாக பொருந்துவார்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு,தனது உன்னதமான நடிப்பின் மூலமும்,அயராத உழைப்பின் மூலமும் பதிலடி கொடுத்திருக்கிறார் சூரி. அவருடைய கண்கள் மட்டுமே போதும் பல காட்சிகளில் கைத்தட்டல்களை பெற.
அவருடைய காதல் காட்சிகளும் கூட நம்மை ரசிக்க வைக்கிறது.படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் சூரியின் நடிப்பிற்கும், ஆக்ஷ்னிர்க்கும் கிடைத்த கைத்தட்டல்கள் சொல்லும், சூரி எவ்வளவு சிறந்த நடிகர் என்று. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னை அக்காதப்பாத்திரமாகவே மாற்றிக்கொள்ளும் திறமை விஜய் சேதுபதிக்கு இருப்பதை நாம் அறிவோம்.
ஆனால் இப்படம் அவருடைய நடிப்பு நம்மை திகைக்கவும், கொண்டாடவும் வைக்கிறது. கௌதம் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ரோலை கம்பீரமாக செய்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்த அத்தனை துணை நடிகர்களும் தங்களுடைய உண்மையான உழைப்பை கொடுத்து இப்படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
வெற்றிமாறன்
பொதுவாகவே வெற்றிமாறன் படம் என்றால் அதில் ஒரு அழுத்தமான அரசியல் ஒளிந்திருக்கும். அதே பாணியான அரசியலையும், போலீஸ்காரர்களின் அடாவடியையும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் துன்பத்தையும் தோலுரித்து காட்டி இப்பயொரு சிறந்த திரைப்படத்தை கொடுத்ததற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாடல், நடனம், சண்டை என நாம் பல கமர்சியல் திரைப்படங்களை பார்த்திருப்போம்.
ஆனால் இப்படியொரு உன்னதமான, உண்மையான கதையை கமர்சியலாகவும் மக்களுக்கு பிடிக்கும் படியாகவும் எடுப்பதற்கு வெற்றிமாறனால் மட்டுமே முடியும். அந்த வகையில் இது வெற்றிமாறனுடைய திரை வாழ்வில் மைல்கல்லான படமாக அமையும் என்பது உறுதி.
இசைஞானியின் இசை:
சமீப காலமாக நாம் தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியாத,பார்க்கத் தவறிய பல உயிரோட்டமான இசைகளை இப்படத்தில் வழங்கியிருக்கிறார் இசைஞானி. அவருடைய பின்னணி இசையுடன் இப்படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு,நாமும் அக்கிராமத்தில் ஒருவராக மாறுவது போல தோன்ற வைப்பதே இசைஞானியின் இசைஜாலம்.
பாஸிட்டிவ்ஸ்:
*படத்தில் நடித்துள்ள அனைவரின் எதார்த்தமான நடிப்பு.
*இசைஞானியின் மாயாஜால இசை.
*ஆழமான கதை, அழுத்தமான திரைக்கதை.
*படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை நம்மை,அக்கதை
களத்திலேயே நிற்க வைத்திருப்பது சிறப்பு.
நெகடிவ்ஸ்:
*சில ஆபாசமான (Nude Scenes) காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
*முதல் பாதியின் கதைக்களம்,சற்று மெதுவாக செல்வதாக தோன்றுகிறது.
மொத்தத்தில் இப்படம் வசூல் ரீதியாக பல கோடிகளையும், விமர்சன ரீதியாக பல விருதுகளையும் குவிக்கும் என்பது உறுதி. படத்தில் வன்முறை காட்சிகள்ஆபாச காட்சிகள் சில இருப்பதால் குழந்தைகளுடன் இப்படத்தை பார்ப்பதை தவிர்க்கலாம்.
நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil