சிறு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு படம், விளம்பரமே இல்லாமல் வெளியாகி, ரசிகர்களின் பாசிட்டீவ் விமர்சனங்களால், பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் பெயர் சு ஃப்ரம் சோ. கன்னடத்தில் வெளியான இந்த படம் பாக்ஷ்ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
கன்னடத்தில் வித்தயாசமான படங்களை இயக்கி நடித்து வரும் ராஜ் பி ஷெட்டி தனது லைட்டர் புத்தா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள படம் சு ஃப்ரம் சோ. இதன் முழு பெயரு சுலோக்ஷனா ஃப்ரம் சோமே்வரா. ஜே.பி.தும்பினாடு இயக்கியுள்ள இந்த படத்தில், ஷானில் கவுதம், சந்தியா அரகேரி ஆகியோருடன், ஜே.பி.தும்பினாடு மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
கடந்த ஜூலை 25-ந் தேதி பெரிய விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் வெளியான இந்த படம், ரசிகர்களின் பாசிட்டீவ் விமர்சனங்களை வைத்தே பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளது. புக் மை ஷோ தளத்தில் இந்த படத்திற்கு இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹாரார் காமெடி பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் 6 கோடி பட்ஜெட்டில் தயாரான நிலையில், தற்போது 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
மேலும், கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி கேரளாவில் வெளியான இந்த படம் அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கேரளாவில் நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்திற்கான விநியோக உரிமையை பெற்றுள்ளார். அதேபோல் தெலுங்கில் மிகப்பெரிய பட நிறுவனமான மைதிரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெலுங்கில் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. அங்கும் இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது, இதன் மூலம் 2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த கன்னட படங்களில் ஒன்றாக இந்த படம் மாறியுள்ளது.
பெரிய பட்ஜெட் படங்கள வசூலை குறிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த படங்கள் அனைத்துமே கலவையான விமர்சனங்களையும் சில சமயங்களில் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதே சமயம், சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வெற்றி பெற தொடங்கியுள்ளன. இதன் மூலம் பட்ஜெட் முக்கியம் அல்ல, கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணமாக சொல்லலாம்.