சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, யோகிபாபு ஆகியோர் இணைத்து நடித்துள்ள "அரண்மனை 4" திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது
கதைக்களம் :
10 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிச்சென்று காதல் திருமணம் செய்து கொண்ட சுந்தர்.சியின் தங்கை தமன்னா, தனது கணவர் சந்தோஷ் பிரதாப்புடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் .ஒருநாள் தமன்னா தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் கணவர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாகவும் சுந்தர்.சிக்கு தகவல் கிடைக்க உடனே தன்கையின் வீட்டிற்கு விரைகிறார் நாயகன்.
இருவரும் எப்படி இறந்தார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் சுந்தர்.சிக்கு ஒருகட்டத்தில் அமானுஷ்ய சக்தியால் தன் தங்கை கொலை செய்யப்பட்டதும், தங்கையின் மகளையும் கொலை செய்ய அந்த அமானுஷ்யம் காத்திருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த தீய சக்தியிடம் இருந்து தமன்னாவின் மகளை சுந்தர் சி. எப்படி காப்பாற்றினார் என்பதை திகில் கலந்த கலகலப்புடன் சொல்வதே அரண்மனை 4 படத்தின் கதை.
நடிகர்களின் நடிப்பு :
சுந்தர்.சியின் நடிப்பு இயல்பாகவே அமைந்திருக்கிறது. முந்தைய படங்களின் சாயல் சில இடங்களில் தென்பட்டாலும் அவர் நடிப்பில் குறை இல்லை. சமீபகாலமாக கவர்ச்சி நாயகியாகவே கலக்கி வரும் தமன்னாவுக்கு இப்படத்தில் தன் நடிப்பு திறனை வெளிக்காட்ட பல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். தமன்னாவால் இப்படியும் எமோஷனல் காட்சிகளில் கலங்க வைக்க முடியுமா என ரசிகர்களை ஆச்சரிப்படுத்துகிறார்.
ராஷி கண்ணாவிற்கு படத்தில் பெரிய வேலை இல்லை. சுந்தர்.சி படங்கள் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பதற்கேற்ப யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சேசு, கோவை சரளா என மொத்த கலகலப்பு பட்டாளமும் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஜெயபிரகாஷ், சந்தோஷ் பிரதாப், கே.எஸ். ரவிக்குமார், சிங்கம்புலி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு
இயக்கம் மற்றும் இசை :
அரண்மனை பிரான்சைஸிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. முந்தைய அரண்மனை படங்களின் கதைகளை போலவே இக்கதை இருந்தாலும், வழக்கமான சுந்தர்.சியின் டிரேட் மார்க்கான குத்து டான்ஸ், கவர்ச்சி, காதல் போன்றவற்றை இப்படத்தில் தவிர்த்திருப்பது ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. திகிலையும், காமெடியையும் சரிவர கலந்து இப்படத்தில் கொடுத்துள்ளார். ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை சிறப்பாகவும், தரமாகவும் உள்ளது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல்
படத்தின் பிளஸ்
பயமுறுத்தும் திகில் காட்சிகள்
மிரட்டலான பின்னணி இசை
காமெடி சரவெடி
இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ்
குஷ்பு, சிம்ரனின் நடனம்
விறுவிறுப்பான முதல் பாதி
அச்சச்சோ பாடல்
படத்தின் மைனஸ்
லாஜிக் இல்லாத காட்சிகள்
ஒரு சில Cringe காமெடிகள்
நிறைய பார்த்து பழகிய கதை
எதிர்ப்பார்க்கப்பட்ட காட்சிகள்
மொத்தத்தில் இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் ரசிக்க இப்படம் தாராளமாக பொருந்தும், ஆனால் எல்லா தரப்பட்ட ரசிகர்களையும் இப்படம் கவர்வதற்கு வாய்ப்புகள் குறைவே
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“