தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதை வகுத்து இன்றும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பருடன் பங்கேற்று தனது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடங்கியவர் டி.ராஜேந்தர். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இவர் 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து வந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்த டி.ராஜேந்தர் தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காட்சிகள் அமைப்பது என்பது பற்றி பலருக்கும் முன்னுதாரனமாக இருந்தவர்.
இதனிடையே சமீபத்தில் ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பர் சேது என்பவருடன் பங்கேற்றிருந்த டி.ராஜேந்தர் தனது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதில் முதலில் பேசிய அவரது நண்பர், இந்த 43 ஆண்டுகால நட்பு, எப்போதும் புதிதாக இருக்கும் என்று சொல்வார்கள். அதேபோல் தான் இப்போது எங்களது நட்பு இன்னும் புதிதாகவே இருக்கிறது.
நான் முதன் முதலில் அவரை சந்திக்கும்போது அவரின் செயல்பாடு சிந்தனை பார்த்து பிரமித்து போயிருக்கிறேன். இந்த வயதில் ஒருவன் இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா? என்று யோசித்திருக்கிறேன். இங்கு பலர் லைட் வெளிச்சத்தில் படித்தாக பேசுகிறார்கள். உண்மையில் ஏழ்மையின் எல்லை வரை சென்றவர் டி.ராஜேந்தர்.
இந்த ஏழ்மை நிலை அறிவுக்கு முன் ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். அதற்கு உதாரணம் இந்த ராஜா. அறிவாளி. குப்பையில் கிடைத்த குண்டுமணி என்று சொல்லலாம் என்று அவர் பேச இடையில் பேசும் டி.ராஜேந்தர், குப்பையில் குண்டுமணி அவர் சொல்வது அனைத்தும் உண்மை. ஆனால் அறிவாளியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் வெல்லலாம். தடை என்பது சுவர். அறிவு இருந்தால் அதை உடைத்துவிடலாம். இது வசனம் இல்லை வாழ்க்கை. சேது கல்லூரிக்கு பேண்ட் போட்டு வருவார். ஆனால் நான் வேட்டி தான் கட்டிக்கொண்டு போவேன்.
அப்போது அவர் என்ன ராஜா பேண்ட் போடலயா என்று கேட்பார். சும்மா இரு சேது, பேண்ட் போட்டா கால்ல செருப்பு போடனும், என் கால் செருப்பு அறுந்துடுச்சி. வேட்டி கட்டினால் செருப்பு போட வேண்டிய அவசியம் இல்லை. அதே மாதிரி பேண்ட் அழுக்கா இருந்தா திருப்பி போட முடியாது. வேட்டி அழுக்கானால் அதை மறுபுறம் திருப்பி கட்டிக்கொள்ளலாம்.
கல்லூரியில் படிக்கும்போது நான் கட்டியது வேட்டி ஆனால் இன்று நான் கொடுக்கும் பேட்டி, நாடே இன்னைக்கு இதை பார்க்குது. என் காலில் இருக்கும் செருப்பை பார்க்காதே எதிர்காலத்தில் நான் பெறப்போகும் சிறப்பை பார். இதை நான் தலைகணத்திற்காக சொல்லவில்லை. இதை பார்க்கும் எந்த இளைஞனும் வாழ்க்கையில் ஏழையா பொறக்கலாம். ஆனால் கோழையாக பொறக்க கூடாது.
வாழ்யாக இருந்தாலும் வெட்ட வெட்ட தழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இது வசனம் இல்ல வார்த்தை அல்ல டி.ராஜேந்தர் வாழ்ந்த வாழ்க்கை என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.