ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிகை மஞ்சுவாரியார் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் படத்தின் மாபெரும் பெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தயாராகி வரும் நடிகர் ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குனர். டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அக்டோபர் 1-ந் தேதி முதல் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்களை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது தலைவர் 170 படத்தில் நடிகை மஞ்சுவாரியார் இணைந்துள்ளார். அசுரன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சுவாரியார் அதனைத் தொடர்ந்து துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மஞ்சுவாரியார் தனது 4-வது தமிழ் படமாக ரஜினிகாந்த் 170 படத்தில் இணைந்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். குறித்து மஞ்சுவாரியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அற்புதமான குழுவில் நானும் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று லைகா நிறுவனம் வெளியிட்ட புகைபடத்துடன் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய ரித்திகா, "அடடா! ரஜினி சார் மற்றும் தலைவர் 170-ன் அனைத்து நட்சத்திர நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து பணியாற்ற போகிறேன் என்பது கனவு போல் உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி! என்ன ஒரு தருணம்!!!! நான் அறிமுகமானதில் இருந்து என்னுடன் நின்று என்னை நம்பிய உங்கள் அனைவருக்கும், நான் மிகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன்! என் மீதான உங்கள் நம்பிக்கை என்னை தொடர்ந்து சிறப்பாக செயல்பட உதவும். பயணம் எவ்வளவு சவாலானதாக இருந்தாலும் எப்போதும் எனக்கு ஆதரவுடன் இருப்பதற்காக எனது ரசிகர்களுக்கு பெரிய நன்றி. இது கொண்டாட வேண்டிய நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் துஷாரா விஜயனை வரவேற்றது. அந்த பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்துள்ளார். இதனிடையே அக்டோபரில் 'தலைவர் 170' படப்பிடிப்பு தொடங்கும் என்றும், வரும் நாட்களில், மீதமுள்ள நடிகர்கள் யார் என்பதை படக்குழு அறிவிக்கும் என்றும் கூறபடும் நிலையில், இந்த படத்தில், ராணா டகுபதி, ஃபஹத் பாசில் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தலைவர் 170' திரைப்படம் 2024ல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“