தளபதி விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கோட் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ள நிலையில், விஜய் நடிக்க உள்ள அவரின் 69-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்த விஜய், அடுத்து மாநாடு நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கட்சி தொடங்கியபோதே கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, நடிப்பில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து விஜய் நடிக்க உள்ள அடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வெளியான கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில். வசூலில் சாதனை படைத்து வருகிறது. விஜயுடன், பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, அஜ்மல், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் வில்லனாக மைக் மோகன் நடித்துள்ளார். மேலும் விஜய் டிஏஜிங் செய்யப்பட்டு இளமையாக இருக்கிறார்.
கோட் படம் பெரிய வெற்றியை தொடர்ந்து விஜய் தனது 69-வது படத்திற்கு தயாராகி வருகிறார். இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ள இந்த படம் விஜயின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை முடித்தவுடன் விஜய் அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. கையில் தீபத்துடன் இருப்பது போன்ற இந்த போஸ்டரில், படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தீபம் போன்று கையில் வைத்திருக்கும் இந்த போஸ்டரில், ஜனநாயகத்தின் ஒளியை ஏந்தி செல்பவர் என்று பொருள்படும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இதேபோல், விஜயகாந்த் உருவாக்கிய தே.மு.தி.க கொடியில், மேலே சிகப்பு, கீழே கருப்பு நடுவில், மஞ்சள் அதற்கு நடுவில் தீபம் இருக்கும் வகையில் கொடி இருக்கிறது. இந்த கொடியும், தற்போது தளபதி 69 போஸ்டரில் உள்ள தீபமும் வைத்து பார்க்கும்போது விஜயகாந்த் அரசியலை விஜய் முன்னெடுக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
மேலும் சமீபத்தில் வெளியான கோட் படத்தில் ஏ.ஐ.டெக்னாலஜியில் விஜயகாந்த் தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டதால், படத்தின் மீதான எதிர்பார்பும் அதிகரித்தது. அதன்பிறகு படம் வெளியானபோது படத்தின் முதல் காட்சியில் விஜயகாந்த் வருவார். அதன்பிறகு விஜயகாந்த் முகத்தை எடுத்தவுடன் இதில் இருந்து விஜய் முகம் தோன்றும். இதன் மூலம் அரசியலில் விஜயகாந்த் இல்லாத இடத்தை விஜய் பூர்த்தி செய்ய உள்ளதை குறிப்பால் உணர்த்தியது போல் உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக தற்போது தளபதி 69 போஸ்டரும் உள்ளதாக கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“