சமீபத்தில் வெளியான தளபதி விஜயின் கோட் திரைப்படம் தமிழ் நாட்டில் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தாலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படம் தோல்வியை தழுவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லியோ படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடித்துள்ள படமட கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மைக் மோகன், லைலா, சினேகா, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் ஏ.ஐ.டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
படத்தின் பாடல்கள் வெளியானபோது கூட எதிர்பார்ப்பு இல்லாத கோட் திரைப்படம், டிரெய்லர் வெளியானது முதல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 5 ந்தேதி வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. நடிப்பை விட்டு அரசியலுக்கு போக உள்ள விஜய்க்கு பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.
மேலும் முதல் நாளில் ரூ120 கோடிக்கு அதிகமாக வசூலித்த கோட் திரைப்படம், 3-வது நாளில் 200 கோடியை கடந்தாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் கோட் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தாலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கோட் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கோட் திரைப்படம் 4 நாட்களில் 288 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்து.
தமிழ்நாடு போலவே மற்ற மாநிலங்களிலும் கோட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழகத்தில் கோட் படத்திற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், மக்கள் வரவு குறைவாக உள்ளது. விஜயின் முந்தைய படமான லியோ தெலுங்கில் பெரிய வெற்றிபடமாக அமைந்தது. இதனால் கோட் படத்தின் தெலுங்கு உரிமம் 16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போதுவரை கோட் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ2.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் ரூ13 கோடி நஷ்டத்தை சந்திப்பார்கள் என்று சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“