விக்ரமின் தங்கலான் மற்றும் சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தற்போது இந்த இரு படங்களையும் வெளியிடுவதில் சிக்கலை சந்தித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டூடியோ கிரீன். சூர்யாவின் நெருங்கிய உறவினராக ஞானவேல் ராஜாவின் நிறுவனமான ஸ்டூடியோ கிரீன், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் திரைத்துறையில் என்ட்ரி ஆனது. இதனைத் தொடர்ந்து பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, மெட்ராஸ் என தொடர்ந்து சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களை மட்டுமே தயாரித்து வந்தது.
இடையில் அவ்வப்போது மற்ற நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த ஸ்டூடியோ கிரீன் தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான், சூர்யா நடிப்பில் கங்குவா என இரண்டு முக்கிய படங்களை தயாரித்துள்ளது. நடிப்புக்காக பெரி ரிஸ்க் எடுக்கும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள தங்கலான் படம் வரும் சுதந்திர தினத்தில் (ஆகஸ்ட் 15) வெளியாக உள்ளது. அதேபோல் சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
இதனிடையே தற்போது இந்த இரு படங்களையும் வெளியிடுவதில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஞானவேல்ராஜா தன்னிடம் கடனாக பெற்ற தொகையை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்கலான் படம் வெளியிடும் முன் ரூ1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ1 கோடி டெப்பாசிட் செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பணத்தை டெபாசிட் செய்தது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தங்கலான் மற்றும் கங்குவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.
ஏற்கனவே பருத்தி வீரன் படம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“