வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தினால், ஸ்டூடியோ கிரீன் தயாரித்த தங்கலான் மற்றும் கங்குவா படம் வெளியிட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்த நிலையில், தற்போது தங்கலான் படத்திற்கு இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் தங்கலான். விக்ரம், பசுபதி, மாளவிகா மோகன், பார்வதி, ஆங்கில நடிகர் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 15) நாளை தங்கலான படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஞானவேல்ராஜா தன்னிடம் கடனாக பெற்ற 10 கோடி தொகையை தொகையை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்கலான் படம் வெளியிடும் முன் ரூ1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி, ரூ1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் தரப்பில் தெரிவித்ததையடுத்து, ‘தங்கலான்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து தங்கலான் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“