தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர் தேங்காய் சீனிவாசன். தற்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவரது பேரன் தமிழ் சினிமாவில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு பிறந்தவர் ஸ்ரீனிவாசன். பின்னாளில் தேங்காய் சீனிவாசன் என்று அறியப்பட்ட இவர், 1965-ம் ஆண்டு ஒரு விரல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கிருஷ்ணா ராவ் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன், சி.ஐ.டி அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிபடமாக அமைந்தது.
அடுத்து ஜெய்சங்கருடன், வல்லவன் ஒருவன், எம்.ஜி.ஆருடன் ஒளி விளக்கு, சிவாஜியுடன் சிவந்த மண் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள தேங்காய் ஸ்ரீனிவாசன், எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த இவர், எம்.ஜி.ஆரின் பல படங்களில் அவரை பற்றி பெருமையாக பேசும் கேரக்டர்களிலேயே நடித்திருந்தார்.
தேங்காய் ஸ்ரீனிவாசன் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் தெரிந்த படம் ரஜினிகாந்தின் தில்லு முள்ளு படம் தான். இந்த படத்தில் அவர் சீரியஸாக நடித்த பல காட்சிகள் காமெடியின் உச்சமாக இருக்கும். காலம் கடந்தும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு படமாக அமைந்துள்ளது. கடைசியாக 1987-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் கிருஷ்ணன் வந்தான் என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/01/thengay-srinevisan-2025-07-01-16-12-42.jpg)
தேங்காய் ஸ்ரீனிவாசனுக்கு அதுவே கடைசி படமாக அமைந்தது. 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியான நிலையில், செப்டம்பர் மாதம் அவர் மரணமடைந்தார். தற்போது தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேரன் ஆதித்யா ஷீவ்பிங்க் அக்கேனம் என்ற படத்தின் மூலம் நடிகராகியுள்ளார். நடிகர் அருண்பாண்டியன் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தில் அவரது மகள் கீர்த்தி பாண்டியனுடன், ஆதித்யா ஷீவ்பிங்க் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஆதித்யா ஷீவ்பிங்க், எனது தாத்தாவை நான் பார்த்ததில்லை. அவர் 1987-ல் இறந்துவிட்டார். நான் 1991-ல் பிறந்தேன். ஆனால் எனது தாத்தாவின் மேனரிசனம் எனக்கே தெரியாமல் என்னுள் இருக்கிறது என்று எனது பாட்டி அவ்வப்போது சொல்வார். தில்லு முள்ளு படத்தில் அவர் கேட்கும் 'யார் அந்த நாகேஷ்' என்ற வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு அவரை போல் வில்லன் காமெடி ஆகிய கேரக்டரில் நடிக்க தான் ஆசை, ஹீரோ ஆசை இல்லை என்று கூறியுள்ளார்.