Tamil Cinema Update Rajini And Legend Saravana Meet : ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பும் லெஜண்ட் சரவணா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்ற நிலையில், இருவரும் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தர்பார் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தில், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேட்த்தில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்ட டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு சென்னையில் இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது. சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸில் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில், ரஜினி நயன்தாரா தொடர்பாக பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த உற்சாகமாக கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில், இதுவரை தனது நிறுவன விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த லெஜண்ட் சரவணா தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜே.டி. மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா ஹீரோயினாக நடித்து வருகிறார். ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில், விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடைபெற்று வந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியது.
இந்நிலையில், தற்போது லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கோகுலம் ஸ்டுடியோஸ் வளாகத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்றதால், ரஜினியும், லெஜண்ட் சரவணனும் சந்தித்து பேசியுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் அண்ணாத்த படத்தின் படபிடிப்பு அடுத்து கோவை மற்றும் பொள்ளாச்சியில் படபிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"