சினிமாவில் திரைக்கதை வசனம் எழுத வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த வாலி பின்னாளில் தமிழ் சினிமாவில் முக்கிய கவிஞராக மாறியிருந்தாலும், அவர் வாய்ப்பு தேடி அலைந்த காலக்கட்டத்தில் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கது அரிதான ஒன்று என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.வி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வாலி, கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர். தொடக்கத்தில் பல தடைகளை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதி வெற்றிகளை குவித்தவர்.
கவிஞர் வாலி தனது ஆரம்பகட்டத்தில் சினிமாவில் ஒரு சில பாடல்கள் மட்டுமே எழுதியிருந்த நிலையில், தினமும் பல இசையமைப்பாளர்களை சந்தித்து பாடல் எழுத வாய்ப்பு கேட்டு, தான் எழுதி வைத்திருந்த பாடல்களை கொடுத்துள்ளார். அப்போது இவருக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். தனக்கு தெரிந்த இசையமைப்பாளர்களிடம் வாலியை அறிமுகம் செய்து வைத்து அவருக்காக பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்று தர பெரிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில், ஒருமுறை எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து வாலிக்கு வாய்ப்பு கேட்டுள்ளார். அவரும் வாலியின் பாடல்களை பார்த்துவிட்டு, எல்லா பாட்டும் ரொம்ப சுமாரா இருக்கு. இவருக்கு சினிமாவில் பிரகாசமாக எதிர்காலம் இருக்கும் என்று தோன்றவில்லை. நல்லா படித்திருக்கிறார். திருச்சிக்கு சென்று நல்ல வேலையில் சேர்ந்து பொழப்பை பார்க்க சொல்லுங்க என்று கூறியுள்ளார். இதை கேட்ட வாலி உடனடியாக சென்னையில் இருந்து கிளம்ப தயாரானார்.
அப்போது அவரை பார்க்க வந்த வி.கோபாலகிருஷ்ணன், பாடல் எழுத வாய்ப்பு வந்திருக்கிறது வாருங்கள் என்று வாலியை அழைத்துக்கொண்டு, இசையமைப்பாளர் கோபால் என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார். மேலும் அவரிடம் இவர் தான் வாலி பெரிய கவிஞர் என்று அறிமுகம் செய்து வைக்க, அவரோ வாருங்கள் என்று அழைத்து அமர வைத்துள்ளார். அப்போது வாலியுடன் வந்த உதவி இயக்குனர் ஸ்ரீனிவாசராவ், வாலி சார் என்ன சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
முதல் பட வாய்ப்பு இவரே கெடுத்துவிடுவார் போல என்று நினைத்த வாலி, பேசாமல் இருக்க, ஸ்ரீனிவாசராவே ஒரு சிகரேட்டை வாங்கி கொடுத்துள்ளார். அதன்பிறகு என்ன ஆனாலும் ஆகட்டும் என்று நினைத்த வாலி, அந்த சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அதை பார்த்த, அந்த இசையமைப்பாளர் இப்போது டியூனை வாசிக்கட்டுமா என்று கேட்க, வாலியும், என்ன நடக்கிறது என்று தெரியாமல் சரி என்று கூறியுள்ளார். அதன்பிறகு டியூன் வாசிக்கப்பட்டு, இது தாய் பாடும் தாலாட்டு பாடல் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்பிறகு பாடல் எழுதி முடித்து வெளியில் வந்த வாலி, ஸ்ரீனிவாசராவிடம் ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்க, நீங்கள் புதுமுகம் என்று தெரிந்தால், அவர் வாய்ப்பு கொடுத்திருக்கமாட்டார். அதனால் தான் ஒரு பந்தாவுக்காக அவர் முன் சிகரெட் பிடிக்க சொன்னேன் என்று சொல்ல, வாலி கலங்கி அழுதுள்ளார். 1959-ம் ஆண்டு வெளியான அழகர்மலை கள்வன் என்ற படத்தில் வரும், நிலவும் தரையும் நீயம்மா என்ற பாடல் தான் வாலி எழுதிய முதல் பாடல்.
அதன்பிறகு தனக்கு சினிமாவில் எதிர்காலம் இல்லை என்று சொன்ன, எம்.எஸ்.வியின் இசையில் வாலி பல ஹிட் பாடல்களை கொடுத்து 5 தலைமுறை நடிகர்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.