பாஸ்கர் சக்தி என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு வடக்கன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த படத்திற்கு ரயில் என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வென்னிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதி பிரபலமானவர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான அழகர்சாமியின் குதிரை படத்திற்கு கதை எழுதிய இவர், தற்போது, இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். டிஸ்கவரி சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வடக்கன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது
முத்துச்சாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.ஜே.ஜனனி என்பவர் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் சில காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தது.
வட மாநில தொழிலார்கள் பற்றியும் அவர்கள் தமிழகத்தில் வேலைக்கு வந்துவிட்டதால், தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் டீசரியில் சுட்டிக்காட்டிய நிலையில், உண்மையாகவே சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டை பாதுகாப்பாக நினைக்கிறார்கள். இதனால் வடக்கன என்ற பெயர் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், இந்த டைட்டிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தால், படத்தை வெளியிட சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக வடக்கன என்ற டைட்டிலை மாற்றிவிட்டு தற்போது இந்த படத்திற்கு ரயில் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“