சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா தற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், அவரை சந்தித்த கவிஞர் வைரமுத்து தனது கவிதை மூலம் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரரான பாரதிராஜா 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், டிக் டிக் டிக், புதிய வார்ப்புகள் என காலத்தால் அழியாக பல படைப்புகளை கொடுத்துள்ளார்.
இயக்கம் மட்டுமல்லாமல், நடிப்பிலும் தனது ஆளுமையை செலுத்திய பாரதிராஜா முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா தற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து இன்று பாரதிராஜாவை சந்தித்து தனது கவிதை மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக வைரமுத்து, தொடர்ந்து ரஜினி, கமல் உட்பட இன்றைய இளம் நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் தர்மதுறை படத்தில் இடம் பெற்ற எந்த பக்கம் பாடலுக்கக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வென்றிருந்தார் வைரமுத்து.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்து, நான் சமீபத்தில் பார்த்ததை விட இப்போது நீங்கள் ரொம்ப நல்லா இருக்கீங்க. உங்கள் உடல்நலம் தேறிவிட்டது என்பதை உங்கள் முகம் சொல்கிறது என்று கூறும் வைரமுத்து, பாரதிராஜாவுக்காக எழுதிய வாழ்த்து கவிதை ஒன்றை வாசிக்கிறார்.
தென்மேற்கு சீமையிலே தேனி நகர் ஓரத்துல என்று தொடங்கும் இந்த பாடலில் பாரதிராஜாவின் உண்மையான பெயரான பால்பாண்டி என்று குறிப்பிட்டு எழுந்து வா இமயமே என்று பாடியுள்ளார். இது தொடர்பான பாடல் வீடியோவை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“