தனது சகோதரி மகளின் திருமண விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது, தனது சகோதரி ஸ்ரீதேவி குறித்து பேசியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், என அனைத்து கேரக்டர்களிலும், தனது முத்திரையை பதித்துள்ள இவர், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். அதேபோல் விஜயகுமாரின் மகன் அருண் விஜய், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார். விஜயகுமாரின் மூத்தமகள் அனிதா, சரத்குமார் நடித்த கூலி படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.
முத்துக்கண்ணு என்பரை முதலில் திருமணம் செய்துகொண்ட விஜயகுமாருக்கு, அனிதா, கவிதா, அருண் விஜய் என 3 பிள்ளைகளும், பின்னாளில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்ட விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இதில் தனது பிள்ளைகள் அனைவருடனும் வசித்து வரும் விஜயகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வனிதாவிடம் பேசாமல் இருக்கிறார்,
அதேபோல், விஜயகுமார் குடும்பத்திற்கு தொடர்பே இல்லாததது போல் வனிதாவும், தனியாக இருந்து தனது வேலைகளை பார்த்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் விஜயகுமார் மகள் அனிதாவின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில், கவிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி, அருண்விஜய் என அனைவருமே, கொண்டாட்டமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
அதே சமயம் இந்த திருமணத்திற்கு வனிதா விஜயகுமார் அழைக்கப்படவில்லை. இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் வனிதா விஜயகுமார், தற்போது தனது தங்கை ஸ்ரீதேவி குறித்து தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. நான் தான் எங்க அம்மாவிடம் அதிகமாக அடி வாங்குவேன். சின்ன வயதில் இருந்தே எந்த தவறு செய்தாலும் ஸ்ரீ பாப்பா மட்டும் தப்பித்துவிடுவாள். எதாவது செய்துவிட்டு வீட்டிற்குள் போய் கதவை பூட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வாள்.
சின்னத்தம்பி படத்தில் வரும் குஷ்பு போல், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் தூக்கிப்போட்டு உடைத்துவிடுவாள். இதனால் பயந்துபோன எல்லோருமே, இவளை ஏதாவது சொன்னால் ஏதாவது செய்துகொள்வாளே என்ற பயத்தில், எதுவும் சொல்லமாட்டார்கள். அந்த மாதிரி நடித்து எல்லோரையும் பயம் காட்டி வைத்திருக்கிறாள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“