தென்னிந்திய சினிமாவில் பிரபல கலை இயக்குனர் சுனில்பாபு மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
கேரளா மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்தவர் சுனில்பாபு. கர்நாடகாவின் மைசூரில் தனது கலைக்கல்வியை முடித்த அவர் தொடக்கத்தில் மலையாள சினிமாவில் கலை இயக்குனராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரிலின் என்பரிடம் உதவியாளராக இருந்த சுனில்பாபு, அதன்பிறகு மலையாள படங்களில் கலை இயக்குனராக அறிமுகமானார். இவரது கலை வண்ணத்தில் வெளியான ஆனந்தபத்ரம் என்ற படத்திற்காக சிறந்த கலை இயக்குனருக்கான கேரளா மாநில அரசு விருதை பெற்றார்.
மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். லக்ஷையா, போலீஸ் இக்பால், கஜினி, வில்லு உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
மேலும் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம், ஆப்ரேஷன் ரோமியோ, மம்முட்டியின் பீஷ்மபருவம், மகேஷ்பாபுவின் மகரிஷி, நிவின் பாலியின் காயக்குளம் கொச்சுன்னி, அல்லு அர்ஜூனின் சயனைடு, மும்பைக்கார், துப்பாக்கி, தோனி அன்டோல்டு ஸ்டோரி, உப்பிரி (தோழா) ஸ்பெஷல் 26 உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும் விஜய் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ள சுனில்பாபுவுக்கு, நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுனில் பாபு மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் கடைசி படமாக வாரிசு ஜனவரி 11-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இவரது மரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் அஞ்சலி மேனன், தனது சூப்பர்ஹிட் படமான 'பெங்களூர் டேஸ்' இல் பணியாற்றிய சுனில் பாபுவு மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சுனில் பாபுவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பெங்களூர் டேஸ் படத்தில் நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம், சில அற்புதமான நினைவுகள் எனக்கு எப்போதும் உண்டு. அன்புள்ள சுனில் அமைதியாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“