விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக வெளியாகி வரும் தகவல் பொய்யானது என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் வாரிசு. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாரான இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார். தில் ராஜூ தயாரித்திருந்த இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ‘
மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, ஷாம், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், வசூலில் சாதனை படைத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் வாரிசு திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் பலரும் இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனிடையே வாரிசு வசூல் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் வசூல் என்ன என்பது முழுமையான தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும். தமிழக வெளியீட்டு உரிமையை ஒருவரும் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஒருவரும் பெற்றுள்ள நிலையில், வாரிசு படம் 200 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுவது 200 சதவீதம் வாய்ப்பில்லாதது என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“