அஜித் நடிப்பில் தயாராகி வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் துணிவு படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ரெட்ஜெயன்ட் நிறுவனம் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானது தமிழ் சினிமாவில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. இதில் போட்டி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றால் அது பரபரப்பின் உச்சமாகத்தான் இருக்கும். அப்படித்தான் தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.
இந்த இரு படங்களும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. அதேபோல் வாரிசு படத்தின் தமிழக வெளியீடு உரிமையை செவன் ஸ்கரீன் நிறுவனம் பெற்றிருந்தது. இதனிடையே தமிழகத்தில் உள்ள 80 சதவீதத்திற்கு அதிகமாக தியேட்டர்களை துணிவு படம் கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியானது.
இதனால் துணிவு படத்திற்கு குறைந்த அளவிலான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஜித்துடன் ஒப்பிடும்போது விஜய்தான் நம்பர் ஒன் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உதயநிதியை சந்தித்து பேசுவேன் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியிருந்தார்.
இதனிடையே தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த்ஆற்காடு, சவுத்ஆற்காடு உள்ளிட்ட 4 பகுதிகளில் வாரிசு படத்தை வெளியிடும் உரிமையை ரெட்ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இது தொடர்பாக செவன் ஸ்கிரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள வாரிசு படம் நேரடியாக தமிழ் தெலுங்கில் தயாராகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஷாம், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை தில்ராஜூ பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/