பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசுக்கு முன்பு எவ்வளவு கலெக்ஷன் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களது படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடுவது வழக்கம். அதே சமயம் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்றால் மகிழ்ச்சியை விட ரசிகர்கள் தரப்பில் இருந்து வரும் மோதலே அதிகமாக இருக்கும். அதே சமயம் இரு படங்கள் குறித்தும் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கும்.
அந்த வகையில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரு படங்களும் ஜனவரி 11-ந் தேதி வெளியாக உள்ளது. இதன் காரணமாக இரு தரப்பு ரசிகர்களும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கோலிவுட் வட்டாரத்தில் வாரிசு துணிவு என்ற வார்த்தைகள் தான் அதிகம் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இதனிடையே படம் வெளியாக இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், இரு படங்களின் டிரெய்லர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்னாள் இரு படங்களும் எவ்வளவு வசூல் ஈட்டியுள்ளது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி வாரிசு படம் இதுவரை ரூ 300 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாகவும், துணிவு படம் ரூ 200 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாரிசு

வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை ரூ70 கோடிக்கும், தமிழகத்தை விடுத்து விஜய் அதிக ரசிகர்களை பெற்றுள்ள கேரளாவில் ரூ6.5 கோடிக்கும், கர்நாடகாவில் ரூ7.5 கோடிக்கும், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவே விநியோகம் செய்தும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ரூ18 கோடிக்கும் வாரிசு திரைப்படம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், வெளிநாட்டு உரிமம் ரூ32 கோடிக்கும், இந்தி உரிமம் ரூ34 கோடிக்கும், படத்தின் ஆடியோ வெளியீடு ரூ10 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ 75 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமத்தை சன்டிவி நிறுவனம், ரூ57 கோடிக்கும் வாங்கியுள்ளதாகவும், இதன் மூலம் வாரிசு திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரூ300 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு

விஜயின் போட்டி நடிகரான அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் ரூ60 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், கேரளா உரிமம் ரூ2.5 கோடி, கர்நாடக உரிமம் ரூ3.6 கோடிக்கும், இந்தி உரிமம் ரூ25 கோடிக்கும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமம் ரூ 3.5 கோடிக்கும், டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ 65 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவி ரூ 20 கோடிக்கும், வெளிநாட்டு உரிமம் ரூ18 கோடிக்கும், ஆடியோ உரிமம் ரூ2 கோடிக்கும், விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் துணிவு படம் வெளியீட்டுக்கு முன்பே ரூ 200 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil