இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீரரான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை கூறும் வகையில் 'வீரமங்கை வேலு நாச்சியார்' என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர் அரவிந்த ராஜ் இயக்கும் இப்படத்தில் வேலு நாச்சியாராக முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் ஆயிஷா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வாழ்க்கை வரலாற்று படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், ‘தேசிய தலைவர்’ படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவருமான ஜே.எம்.பஷீர், இந்த படத்தில் பெரிய மருது என்ற முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் ஆயிஷா ஜே.எம்.பஷீர் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜே.எம்.பஷீர் தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா புதன்கிழமை (ஜனவரி 3) சென்னை தி.நகரில் உள்ள தேவர் மஹாலில் நடைபெற்றது. இப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எம்.பஷீர், வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கு கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறோம். எனது மகள் ஆயிஷா கதாநாயகியாக நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்திற்கு ஜே ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யவுள்ள நிலையில், சண்டைக்காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் அமைக்கிறார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“