மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபுவும், தெலுங்கு ஸ்டார் நாக சைதன்யாவும் இணைந்த "கஸ்டடி"(Custody) படம் மக்களை ஈர்த்தது என்பதை இவ்விமர்சனத்தில் காணலாம்.
கதைக்களம்:
ராஜமுந்திரியில் நடக்கும் ஒரு வெடி விபத்தில் சிக்கி பல குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணமாக இருக்கும் வில்லன் அரவிந்த் சாமியை சிபிஐ பிடிக்கிறது. ஒரு கட்டத்தில் அரவிந்த்சாமியை காப்பாற்ற நினைக்கும் முதலமைச்சர் உட்பட பல உயர் அதிகாரிகள், அதன் பிறகு அவரை கொல்ல திட்டமிடுகிறார்கள். இந்த தடைகளைக் கடந்து நாகசைதன்யாவும் அவருடைய உயர் அதிகாரியும் அரவிந்த் சாமியை கோர்ட்டுக்கு பத்திரமாக அழைத்து சென்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
நடிகர்களின் நடிப்பு:
நாகசைத்தன்யாவின் முதல் தமிழ் படம் என்பதால், அவரது எதார்த்தமான நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தாலும் சில இடங்களில் அவருடைய டப்பிங் காட்சிகளை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். வில்லனாக வரும் அரவிந்த்சாமி தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து ஹீரோவிற்கே டஃப் கொடுத்திருக்கிறார். மேலும் சரத்குமார்,சம்பத், பிரியாமணி ஆகியோர் தங்களுக்குரிய கதாபாத்திரத்தை அழகாக செய்துதிருக்கிறார்கள்.மேலும் சர்ப்ரைஸாக ஜீவாவின் நடிப்பு எதிர்பாராதது.
இயக்கம் மற்றும் இசை:
இது வழக்கமான வெங்கட் பிரபுவின் படத்திலிருந்து சற்று விலகி முழு ஆக்சன் படமாக மாறியிருக்கிறது. இருந்தாலும, வெங்கட் பிரபுவின் டிரேட் மார்க் காட்சிகள் ஆங்காங்கே இடம்பெறுவது அவரது ரசிகர்களுக்கு திருப்தி அளித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. சண்டை காட்சிகளிலும், பரபரப்பான காட்சிகளும் அவருடைய இசை நம்மை மிரட்டுகிறது. பாடல்கள் பெரியளவில் ஈர்க்கவில்லை.
படம் எப்படி?
ஆரம்பக் காட்சிகள் எல்லாம்,நாம் தமிழ் படம் பார்க்கிறோமா?அல்லது தெலுங்கு படம் பார்க்கிறோமா? என்ற அளவில் படம் மிகவும் ஸ்லோவாக சென்று ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. அரவிந்த்சாமி போலீஸிடம் சிக்கிபிறகு தான் படத்தின் விறுவிறுப்பே ஆரம்பமாகிறது. அப்போது தொடங்கிய விறுவிறுப்பை கடைசி வரையும் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் திரைக்கதையில் தடுமாறியிருக்கிறார் என்பதே பெரிய வருத்தம். வெங்கட் பிரபுவின் பலமான, காமெடி காட்சிகளே இப்படத்தில் வொர்க் அவுட் ஆகவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
மொத்தத்தில், நாம் படத்தின் அடுத்த காட்சிகளை சுலபமாக யூகிக்கக்கூடிய ஒரு சுமாரான திரில்லர் படமாக அமைந்திருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil