தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கடந்த 1981-ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.எஸ்.சிவாஜி. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன், விக்ரம், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், குணா கலைஞன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
கமல்ஹாசன் மட்டுமல்லாமல், பிரபு, சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலல் நடித்துள்ள ஆர்.எஸ்.சிவாஜி, அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜூடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் தெய்வமே நீங்க எங்கேயே போய்ட்டீங்க என்று இவர் சொல்லும் டைலாக் இன்னும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ள ஆர்.எஸ்.சிவாஜி, சமீபத்தில் வெளியான சாய் பல்லவியின் கார்கி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. அதன்பிறகு வட்டகரா என்ற படத்தில் நடித்த இவர், உதவி இயக்குனர் சவுண்ட் டிசைனர், லைன் தயாரிப்பாளர் என பன்முற திறமை கொண்டவர்.
இந்நிலையில், 66 வயதாக நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறந்த நடிகர் ஆர்.எஸ். சிவாஜி, நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“