ஜூவி,எட்டு தோட்டாக்கள் என தனது வித்தியாசமான கதை தேர்வால் ரசிகர்களை ஈர்த்து வரும் வெற்றியின் நடிப்பில் இன்று வெளியான "பம்பர்" திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா?
கதைக்களம்:
தூத்துக்குடியில் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு ரவுடி மாதிரியான இளைஞன் தான் நாயகன் வெற்றி. இவ்வாறு அவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு கொலைப்பழியில் சிக்குகிறார்.அதிலிருந்து தப்பிப்பதற்காக சபரிமலைக்கு மாலை போட்டுக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். மேலும் கேரளாவில் ஒரு முதியவரிடம் (ஹரிஷ் பெடரி)லாட்டரி சீட்டு வாங்கும் அவர், அதில் என்ன நமக்கு பம்பர் விழவா போகிறது என்று அந்த லாட்டரி சீட்டை அங்கே போட்டுவிட்டு வருகிறார்.
அதன் பிறகு அந்த லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுகிறது. இதனை அறிந்த அந்த நேர்மையான முதியவர் அந்த சீட்டை வாங்கியவரிடமே இதை ஒப்படைக்க முடிவு செய்து வெற்றியை தேடி பயணிக்கிறார். அவர் வெற்றிகரமாக வெற்றியை கண்டுபிடித்தாரா? இல்லையா? அந்த பணம் யாருக்கு சென்றது? என்பதை வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கும் படமே "பம்பர்".
நடிகர்களின் நடிப்பு:
பொதுவாகவே வித்தியாசமான கதையை தேர்வு செய்வதில் வல்லவரான வெற்றிக்கு இப்படமும் அதே போன்ற ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறது. தூத்துக்குடியில் ரவுடியாக சுற்றி தெரியும் இளைஞன் வேடத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது இவருடைய முகம். சபரிமலைக்கு சென்று திரும்பும் இவருக்கு ஏற்படும் திருப்பத்தால் வேறொரு நபராக மாறும் அந்த வித்தியாசத்தையும் தன் நடிப்பின் மூலம் அசத்தலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகியான ஷிவானிக்கு தன் நடிப்பை நிரூபிக்க இப்படம் உதவி இருக்கிறது. முதியவராக வரும் ஹரிஷின் எதார்த்தமான நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. ஜி.பி முத்துவின் சில காமெடிகள் ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகி இருப்பது சிறப்பு.
இயக்கம் மற்றும் இசை:
செல்வகுமார் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஒரு லாட்டரி டிக்கெட் டிக்கெட்டை மையமாக வைத்துக் கொண்டு திரைக்கதையை அவ்வளவு சுவாரசியமாகவும், எதார்த்தமாகவும், எமோஷனலாகவும் எழுதி வியக்க வைக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது.
படம் எப்படி :
நாம் இதுவரை கண்டிராத ஒரு புதுமையான கதை என்று சொல்ல முடியாது, ஆனால் திரைக்கதையும், காட்சிகளும் பல இடங்களில் நமக்கு புதுமையை கொடுக்கிறது. ஒரு சாதாரண கதையை வைத்துக் கொண்டு அதற்குள் பல சுவாரசியமான விஷயங்களையும் ஆங்காங்கே மனிதத்தை வெளிப்படுத்தும் காட்சிகளையும், வசனங்களையும், வைத்து திரையரங்கிற்கு வந்த ரசிகர்களை ஏமாற்றாமல் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், மதத்தை தாண்டி மனிதத்தை வெளிப்படுத்தும் ஒரு பீல் குட் மூவியாக இந்த "பம்பர்" அமைந்திருக்கிறது.
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“