விடுதலை கொடுத்த வெற்றியின் மகிழ்ச்சியில் உள்ள இயக்குனர் வெற்றிமாறன் விரைவில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 2-பாகங்களாக தயாராகியுள்ள விடுதலை படத்தின் முதல்பாகம் கடந்த மார்ச் 31-ந் தேதி தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே விரைவில் விடுதலை படத்தின் தெலுங்கு பதிவு வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக வெற்றிமாறன் ஆந்திராவில் முகாமிட்டுள்ளார். இதற்காக ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன் தெலுங்கு நட்சத்திரங்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய அவர், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஆடுகளம் படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் என்னை வந்து சந்தித்தார். அவர் தமிழுக்கு வர விரும்புவதாகச் சொல்லி, தன்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டார். அப்போது வடசென்னையில் ஒரு பவர்புல் ரோல் பற்றி சொன்னேன்.
ஆனால் அப்போது வடசென்னை என்று நான் நினைத்த படம், பின்னர் தனுஷ் நடிப்பில் உருவானது அல்ல. அதேபோல் “ஆடுகளம் முடிந்த உடனேயே மகேஷ் பாபுவையும் சந்தித்தேன். அசுரன் மற்றும் லாக்டவுனுக்குப் பிறகு, நான் மீண்டும் ஜூனியர் என்டிஆரையும் சந்தித்தேன், நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும். நான் திரைப்படங்களை உருவாக்க சிறிது காலம் எடுத்துக்கொள்கிறேன் (சிரிக்கிறார்).
ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்திற்கு மாற நீண்ட காலம் எடுக்கும், அதுதான் பிரச்சனை. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டபோது வெற்றிமாறன் சிரித்துக்கொண்டே, "ஒருவேளை, இது மல்டி ஸ்டாரராக இருக்கலாம்" என கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜூனியர் என்.டி.ஆர் ஸ்ரீமந்துடு புகழ் இயக்குனர் கொரட்டாலு சிவா இயக்கி வரும் படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படம் தெலுங்கில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம். என்டிஆர் 30 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிறகு ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் போர் 2 படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளது உறுதிசெய்யப்பட்டது. ஷாருக்கானின் பதான் மற்றும் சல்மான் கானின் டைகர் தொடர்களை உள்ளடக்கிய ஒய்ஆர்எஃப் (YRF) இன் ஸ்பை யூனிவர்சை சேர்ந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“