வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார் நடித்துள்ள விடுதலை 2 படம் நாளை (டிசம்பர் 20) வெளியாக உள்ள நிலையில், படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகியள்ளது.
சூரி விஜய் சேதுபதி ஆகியோருடன், மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படம், டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் படத்தில் ஏற்கனவே வெளியான தினம் தினம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே விடுதலை 2 படம் நாளை (டிசம்பர் 20) வெளியாக உள்ள நிலையில், படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இதனிடையே விடுதலை 2 படத்தை சட்டவிரோதமான இணையதளத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பெரிய நடிகர்களின் படங்கள் தொடங்கி தற்போது சிறு பட்ஜெட் படங்கள் வரை வெளியான முதல் நாளே ஆன்லைனில் வெளியிடும் பைரசி கும்பலுக்கு எதிராக திரைத்துறையினர் அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடுதலை 2 படத்தையும் சட்டவிரோமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று படக்குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விடுதலை 2 திரைப்படத்தை சட்டவிரோதமான இணையதளத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், 2-ம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதனிடையே படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், டிசம்பர் 20-ந் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“