"பிச்சைக்காரன்- 2" படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மீனாட்சி சௌத்ரி, ரிதிக்கா சிங் ,ராதிகா, ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் எனப் பலரும் நடித்துள்ள படம் ’கொலை’. இப்படம் மக்களை கவர்ந்ததா?
கதைக்களம் :
மாடல் அழகி மற்றும் பாடகியான மீனாட்சி சௌத்ரி கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரியான ரித்திகாவை நியமிக்கின்றனர், அவருக்கு உதவியாக துப்பறிவு மாஸ்டர் விஜய் ஆண்டனி போலீசாரால் நியமிக்கப்படுகிறார். இந்த இருவரும் சேர்ந்து கொலையாளி யார்? மீனாட்சி ஏன் கொல்லப்பட்டார்? என்பதை கண்டுபிடிக்கும் கதையை இந்த "கொலை".
நடிகர்களின் நடிப்பு :
வழக்கமான விஜய் ஆண்டனியின் சட்டிலான நடிப்பை தான் இப்படத்திலும் நம்மால் பார்க்க முடிகிறது. பெரிய அளவில் அவரது நடிப்பில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் கதைக்கு தேவையான அளவு நடித்திருக்கிறார். அவருடைய வயதான தோற்றம்,அடக்கமான அணுகுமுறை, மென்மையான பேச்சு என அனைத்திலும் அந்த கதாபாத்திரத்தின் முதிர்ச்சியை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரித்திகா சிங் தலைமையில் தான் அந்த கொலையாளியை கண்டுபிடிக்கிறார்கள் என்றாலும் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு சற்று குறைவாகவே இருக்கிறது. ஒரு மாடலாகவும் பாடகியாகவும் ஒரு நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார் மீனாட்சி சௌத்ரி. மேலும். ராதிகா, ஜான் விஜய் ஆகியோரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை :
2013 ஆம் ஆண்டு "விடியும் முன்" என்ற படத்தை கொடுத்த இயக்குனர் பாலாஜி குமார், அதன் பிறகு பத்து வருடங்கள் கழித்து ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையுடன் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கிறார். இவர் ஹாலிவுட்டில் பணியாற்றியவர் என்பதால் அதே ஸ்டைலில் தமிழில் ஒரு படம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடாகத்தான் இப்படம் அமைந்திருக்கிறது. அதற்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், எடிட்டர் செல்வா ஆகியோருடைய பங்களிப்பும் இப்படத்தின் தரத்தை ஹாலிவுட்'க்கு நிகராக கொடுக்க உதவி இருக்கிறது. கிரீஸ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசையும் படத்தின் தன்மையை உணர்ந்து,அதற்கேற்ப அசத்தலாக அமைந்திருக்கிறது.
படம் எப்படி ?
ஒரு பக்காவான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடனே படத்தின் முதல் காட்சிகள் தொடங்கப்படுகின்றன. ஒரு மாடல் அழகி கொல்லப்படுகிறாள். அதை யார் செய்தார்கள்? என்பதற்கான
விசாரணை நடைபெற்று மாடல் அழகிக்கு நெருக்கமான நான்கு பேரிடம் விசாரணை நடைபெறுவதாக திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர்.ஆனால் முதல் பாதி கொடுத்த அந்த சுவாரசியத்தை இரண்டாம் பாதியின் திரைக்கதையும், எழுத்தும் கொடுக்கவில்லை என்பதே உண்மை. திரில்லர் படம் என்றாலே பரபரப்பான, சுவாரஸ்யமான காட்சிகள் தான் அப்படத்தின் அடித்தளமே. ஆனால் அந்த இரண்டையும் இப்படத்தின் திரைக்கதை பெரியதாக ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை.
இப்படத்தின் மேக்கிங் உலக தரத்தில் அமைந்திருப்பது நாம் பெருமைப்படக்கூடிய விஷயம் என்றாலும் அதற்கேற்ப திரைக்கதை ஒத்துழைப்பு கொடுக்காதது சற்று ஏமாற்றமே.மொத்தத்தில் ஒரு ஆவ்ரேஜ் (Average) இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக முடிந்திருக்கிறது,இந்த "கொலை".
- நவீன் சரவணன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.