தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனியின் மற்றொரு படைப்பான "ரத்தம்" படத்தின் முழு விமர்சனத்தை காணலாம்.
கதைக்களம் :
தனக்கு பிடித்த நடிகர் பற்றி தவறாக செய்தி வெளியிட்டதற்காக ஊடகத்தில் வேலை செய்யும் பத்திரிகையாளர் செழியனை ரசிகர் ஒரு கொலை செய்து விடுகிறார். ஆனால் ரஞ்சித் குமார்(விஜய் ஆண்டனி) என்ட்ரி கொடுத்த பிறகு அந்த கொலையாளி தானாக இதை செய்தாரா இல்லை யாரோ ஒருவரின் சுயலாபத்திற்காக பலிகடா ஆகிவிட்டாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
புலனாய்வு பத்திரிகையாளரான ரஞ்சித்தின் வாழ்வில் நடந்த துயரமான சம்பவத்தால் தன் மகளுடன் கொல்கத்தாவில் தங்கியிருக்கிறார். தன் நண்பன் செழியனின் கொலையை கண்டுபிடிக்க மீண்டும் களத்தில் இறங்குகிறார். இந்த கொலையின் பின்னணியை ரஞ்சித் எப்படி கண்டுபிடித்தார் என்பதே கதை.
நடிகர்களின் நடிப்பு :
அதிபுத்திசாலி புலனாய்வு அதிகாரியாக விஜய் ஆன்டனி ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பை கொடுத்திருக்கிறார். நந்திதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி ஆகியோருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் குறிப்பிட்ட பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இசை மற்றும் இயக்கம்
கண்ணன் நாராயணனின் பின்னணி இசை சுமார் ரகம்.தமிழ்படம் 1,2 ஆகிய ஜாலியான படங்களை இயக்கிய அமுதன் ஒரு திரில்லர் ஜார்னரை முயற்சி செய்திருக்கிறார்.
படம் எப்படி :
மிகவும் அறிவாளியான ஹீரோ வில்லனை கண்டுபிடிக்கும் காட்சிகள் சூப்பராக அமைந்திருந்தாலும் ஏனோ கதையில் உள்ள அந்த விறுவிறுப்பு திரைக்கதையில் இல்லை. ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சனையை கையில் எடுத்து அதை சுற்றி ஒரு நல்ல கதை அமைத்த இயக்குனர், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார். வில்லன் ஏன் இந்த கொலைகளை செய்கிறார் என்பதற்கான போதிய விளக்கங்கள் சொல்லப்படவில்லை.விஜய் ஆண்டனியின் Flashback காட்சிகளை சற்று குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் ஒரு படமாக பார்க்கும் போது நிறைகளை விட குறைகள் நம் கவனத்தை ஈர்பதால், "ரத்தம்" என்ற தலைப்பு கொடுத்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.
நவீன் சரவணன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“